|
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - மதமும் வெகுளியும் காமமும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம், பெருமித நீர்த்து - மேம்பாட்டு நீர்மையினை உடைத்து. (மதம் : செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின், அளவறிந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான் , இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறும் உடைமையின் , மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிறர்மனை நயத்தலும், வெகுளியும், சிறியார் செய்வன செய்தொழுகுதலும் இல்லா
தார்க்கு ஆக்கம் தலையெடுக்கும் நீர்மையுடைத்து.
பிறர்மனை விரும்புதல் செருக்கினால் வருதலின் செருக்கு என்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் - அகங்கரிப்பும் வெகுளியும் கழிகாமமுமாகிய குற்றங்களில்லாத அரசரின் செல்வம்; பெருமித நீர்த்து - மேம்பாட்டுத் தன்மையை யுடைத்து.
செருக்கினாற் காவற்கடமை தவறுதலும் பெரியாரைப் பிழைத்தலும், சினத்தினால் ஐம்பெருங்குழுவும் உறுதிச்சுற்றமும் போன்றவற்றின் அன்பை இழத்தலும், சிறுமையினால் பழியும் உயிர்ச்சேதமும், நேருமாதலின், அக்குற்றங்களில்லாத அரசரின் செல்வம் வீறுபெற்றுதென்றார். சிறியோர் இயல்பு என்னுங் கருத்தால் அளவிறந்த காமம் 'சிறுமை' எனப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள்
இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அகங்காரமும் கோபமும் அற்பத்தனமும் இல்லாதவர் களுடைய செல்வந்தான் பெருமை கொள்ளத்தக்கது,
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செருக்கும் (மதமும்), கோபமும், காமமும், ஆகிய குற்றங்கள் இல்லாதவருடைய செல்வம் மேம்பாடான தன்மையினை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தற்பெருமை, கோபம், சிறுமைப் பண்பு இவை இல்லாத தன்மையர் உலகில் பாராட்டுக்குரியவராய் வாழ்வர்.
|
|
Translation
|
|
Who arrogance, and wrath, and littleness of low desire restrain,
To sure increase of lofty dignity attain.
|
|
Explanation
|
|
Truly great is the excellence of those (kings) who are free from pride, anger, and lust.
|
|
Transliteration
|
|
Serukkunj Chinamum Sirumaiyum Illaar
Perukkam Perumidha Neerththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|