|
கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும்.
இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கல்லா ஒருவன் தகைமை-நூல்களைக் கல்லாத ஒருவன் தன்னை அறிவுடையவனாகத் தான் மதிக்கும் மதிப்பும், அவனை அங்ஙனம் பிறர் மதிக்கும் மதிப்பும்; தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் -அவற்றைக் கற்றவன் அவனைக் கண்டு உரையாடும் போது கெட்டுப்போம்.
கற்றவன் என்பது அவாய்நிலையான் வந்தது.
"காணாமல் வேணதெல்லாங் கத்தலாங் கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே-நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்காற்
கீச்சுக்கீச் சென்னுங் கிளி"
என்னும் பிற்காலத்து ஒளவையார் ஒருவர் தனியன் இக்குறட் பொருளை விளக்குவதாகும்:
|
|
கலைஞர் உரை:
|
|
கல்வி யறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல்
காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம்
அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கற்றவன்போல் அறிவுள்ள சொற்களை மனப்பாடமாகப் பேசிவிட்டாலும் அவன் கல்லாதவன் என்பது எளிதில் வெளியாகி விடும்.) கல்லாத ஒருவன் கற்றவனைப் போலப் பாசாங்கு செய்த தன்மை அவனுடன் நெருங்கிப் பேச்சுக் கொடுத்தால் வெளியாகி விடும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கல்வியாளர்கள் அவையில், கல்லாத ஒருவன் தலைப்பட்டு பேசமுயல்வானாயின் அவன் உரையின் தன்மை அவனின் தகுதியைக் காட்டிவிடும்.
|
|
Translation
|
|
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.
|
|
Explanation
|
|
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of the learned).
|
|
Transliteration
|
|
Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu
Sollaatach Chorvu Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|