|
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதவரும் மிக நல்லராவர், கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை - இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனிநல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.
சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர்.
உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல்.
கல்லாது நீண்ட வொருவ னுலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ
துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)
|
|
கலைஞர் உரை:
|
|
கற்றவர்களின், முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால்
கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கல்லாதவர்கள் கற்றறிந்தார் சபையில் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது.) கற்றறிந்தார் கூடியுள்ள சபையில் பேசாமல் இருக்கிற வரையிலும் கல்லாதவர்கள் வெகு நல்லவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தாமே தம்மையுணர்ந்துகொண்டு கற்றார் இருக்கும் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருந்தால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவர்கள் ஆவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
கல்லாதவர்கள் கூட கற்றவர்கள் கூடியிருக்கும் அவையில் அதிகம் பேசாதவராக அமைதியாக இருப்பின் நல்லவராகவே கருதப்படுவர்
|
|
Translation
|
|
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.
|
|
Explanation
|
|
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
|
|
Transliteration
|
|
Kallaa Thavarum Naninallar Katraarmun
Sollaa Thirukkap Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|