|
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து.
கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒருவற்கு - ஒருவனுக்கு ; தான் ஒருமைக்கண்கற்ற கல்வி -தான் ஒரு பிறப்பிற் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து -எழுபிறப்பளவுந் தொடர்ந்து அரணாகநின்று உதவுந் தன்மையயுடையது.
கல்வியறிவு வினைகள் போல உயிரைப் பற்றித் தொடர்தலின், 'எழுமையும் ஏமாப்புடைத்து ' என்றார் . 'எழுமை ' என்றது தொடர்ந்த எழுமக்கட்பிறப்பை. அல்லாக்கால் அவ்வறிவு பயன்படாமை அறிக. ஏமாப்பு பாதுகாப்பு. உதவுதல் நல்வழியிற்செலுத்தி நலமாக வாழ்வித்தல். ஏழென்பது இங்குக் காலநீட்சி பற்றிய நிறைவெண்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவனாது, ஏழேழு
தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அப்படித் தம்முடைய ஆயுள் முழுதும் நல்லறிவை நாடிக் கற்பவருக்கு) ஒரு பிறப்பில் சுற்றுக்கொள்ளும் நல்லறிவு இனி வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவனுக்குத் தன பிறப்பிலே கற்ற கல்வியானது எழுகின்ற பல பிறப்புக்களிலும் பாதுகாப்பாக உதவுதலை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒரு பிறப்பில் ஒருவன் கற்ற கல்வியானது. அந்த ஒரு பிறப்பில் மட்டுமல்லாது தொடரும் எல்லா பிறப்பிலும் உரிய பாதுகாப்பாக அமையும்.
|
|
Translation
|
|
The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.
|
|
Explanation
|
|
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
|
|
Transliteration
|
|
Orumaikkan Thaan Katra Kalvi Oruvarku
Ezhumaiyum Emaap Putaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|