|
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில்.
இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே- யாரொடும், அவர் மகிழுமாறு சென்று கூடி, இனி இவரை என்று காண்பேமென்று அவர் ஏங்குமாறு நீங்குதலாகிய அத்தன்மையதே; புலவர் தொழில் - சிறந்த கல்வியுடையார் செயலாம்.
கற்றாரின் அடக்கமும் அறவொழுக்கமும் இன்சொல்லும் உறுதி பயக்கும் அறிவுரையும் எல்லாரையும் இன்புறுத்துதலால், அவரை விட்டுப் பிரிய ஒருவரும் விரும்பார் என்பதாம். ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது
மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கல்வி என்பது கற்ற வித்தையைக் காட்ட, வாது புரியும் புலமை அல்ல.) கூடும்போது தாமும் பிறரும் மகிழும்படியாகச் சபையிற் கூடிப் புலமைத் திறமைகளைக் காட்டுவதில் கருத்து வேற்றுமைகள் உண்டாகிப் பின் பிரியும்போது வருத்தத்தோடு பிரிந்துபோவதுதான் புலவர்கள் செய்யும் வேலை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
யாவரும் மகிழுமாறு அவர்களுடன் சேர்ந்து பழகி, இனி அவரை எப்போதும் காண்போம் என நினைத்துப் பிரிகின்ற தன்மையுடையதே கற்றவர்களின் தொழிலாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மகிழும் படியாகக் கூடிப் பழகி அளவளாவி, உள்ளம் நினைந்து வருந்திப் பிரிதல் புலமை நிறைந்த கற்றவர் செயலாகும்.
|
|
Translation
|
|
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!.
|
|
Explanation
|
|
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).
|
|
Transliteration
|
|
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|