|
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின் இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன் மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம் போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது. செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நுண்ணியவாக வாராய்ந்த நூல்கள் பலவற்றையுங் கற்றானாயினும், பின்னையும்
தனக்கு இயல்பாகிய அறிவே மிகுத்துத் தோன்றும்.
மேல் அறிவிற்குக் காரணம் ஊழ் என்றார் அஃதெற்றுக்கு? கல்வியன்றே காரணமென்றார்க்கு ஈண்டுக் கல்வியுண்டாயினும் ஊழானாய அறிவு வலியுடைத்தென்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நுண்ணிய பலநூல் கற்பினும்-பேதைப்படுத்தும் தீயூழுள்ள ஒருவன் நுண்ணிய பொருள்களையுணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும்; மற்றும் தன் உண்மை அறிவே மிகும்-அவனுக்குப் பின்னும் அவ்வூழாலாகிய பேதைமையுணர்வே மேற்படும்.
பொருளின் நுண்மை நூல்மேலேற்றப்பட்டது. மேற்படுதல் நுண்ணூலறிவை முற்றும் மறைத்தல் அதனால் தீயூழினர்க்கு இழப்பைத்தடுக்க நூலறிவு பயன்படா தென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும்
அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பேதை ஆக்குவதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பல நுட்பமான நூல்களைப் படித்து வேண்டிய உபாயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் தீவினைப் பயன்கள் வரும்போது படித்து வைத்திருந்த அறிவு தருணத்தில் உதவாமல் முன்னிருந்த தன்னுடைய சாதாரண அறிவுதான் முன்னால் வந்து நிற்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றிருந்தாலும், அவனுக்குப் பின்னும் தன் ஊழாலாகிய பேதைமை (அறியாமை) அறவே மேற்பட்டு நிற்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நுட்பமான நூல்பல கற்றிருப்பினும், செயல்படுங்கால் ஒருவனுக்கு ஊழின் வழியதான உண்மை அறிவே முன்நிற்கும்.
|
|
Translation
|
|
In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.
|
|
Explanation
|
|
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.
|
|
Transliteration
|
|
Nunniya Noolpala Karpinum Matrundhan
Unmai Yarive Mikum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|