Thirukural

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி.

கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும். இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கைப்பொருள் ஆகுஊழால் அசைவின்மை தோன்றும்-ஒருவன் கையிற் பொருள் சேர்தற்குக் கரணகமான நல்லூழால் முயற்சியுண்டாகும்; போகு ஊழால் மடி தோன்றும் -அவன் கையிலுள்ள பொருள் தீர்தற்குக்கரணகமான தீயூழாற் சோம்பலுண்டாகும். 'ஆகூழ்,' 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் கரணகப் பொருளன . அசைவு சோம்பல். ஒருவனுக்குச் செல்வம் தன்முயற்சியாலும் வரும்; முன்னோர் தேட்டாகப் பிறர் முயற்சியாலும் வரும். அங்ஙனமே ஒருவன்செல்வத்திற்கு அழிவு அவன் செயலாலும்வரும்; கள்வர் பகைவர் முதலிய பிறர் செயலாலும் வரும். ஒருவனுக்குச் செல்வத்தின் ஆக்கம் போன்றே அழிவும் பிறரால்மட்டுமன்றித் தன்னாலும் நேருமாறு,ஊழே முயற்சியையும் சோம்பலையும் தோற்றுவிக்கு மென்பது இங்குக் கூறப்பட்டது. 'கைப்பொருள்' என்பது முன்னும் பின்னுஞ் சென்றியைதலால் தாப்பிசைப்பொருள்கோளும் இடை நிலை விளக்கணியுமாகும்.
கலைஞர் உரை:
ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கை நிலை சோம்பலை ஏற்படுத்தும்.
சாலமன் பாப்பையா உரை:
பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
செல்வம் வரவேண்டிய நல்வினைப்பயன் வரும்போது சோர்வில்லாத மன உறுதி உண்டாகும். உள்ள செல்வம் போக வேண்டிய தீவினைப் பயன்கள் வரும்போது சோம்பல்" உண்டாகிவிடும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவருக்குக் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழினால் முயற்சியானது தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழினால் சோம்பல் தோன்றும்.
தமிழ்க்குழவி உரை:
ஊழ்வினைப்பயன் நல்லதாக இருந்தால் விடாமுயற்சியும் வெற்றியும் தோன்றும், தீயதாக இருந்தால் சோம்பலே தோன்றும்.
Translation
Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs.
Explanation
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.
Transliteration
Aakoozhaal Thondrum Asaivinmai Kaipporul Pokoozhaal Thondrum Mati

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 371