Thirukural

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்கொல்லாமை சூழும் நெறி.

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின், யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர் உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும் நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும் அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான் இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நல்ல வழியென்று சொல்லப்படுவது யாதெனின், அது யாதொருயிரையுங் கொல்லாமையைச் சிந்திக்கும் வழி. இது நன்னெறியாவது கொல்லாமை யென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நல் ஆறு எனப்படுவது யாது எனின்- பேரின்ப வீடுபேற்றிற்கு நல்ல வழியென்று சொல்லப்படுவது எது என வினவின் யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி- அது எவ்வுயிரையும் கொல்லாமையைக் கருதும் நெறியாகும். "யாதொன்றும்" என்றது துறந்தாரை நோக்கி ஓரறிவுயிரையும் உட்படுத்தற்கு.
கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கொலை சம்பந்தப்பட்ட எந்தக் காரியமும் சன்மார்க்க மாகாது.) நன்னெறி என்பது எதுவென்றால், எதற்காகவானாலும் எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்ற கொள்கையுள்ளது தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்றால், அது யாதோர் உயிரையும் கொல்லாமையாகிய அறத்தினைக் காக்கும் நெறியேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
வாழ்வியல் நெறிகளுள்மிகவும் நன்மை பயப்பது யாதெனில் எந்த உயிரையும் எதற்காகவும் கொலை புரியாது ஒழுகுதலாகிய அறநிலைப்பாடே ஆகும்.
Translation
You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay.
Explanation
Good path is that which considers how it may avoid killing any creature.
Transliteration
Nallaaru Enappatuvadhu Yaadhenin Yaadhondrum Kollaamai Soozhum Neri

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 324