|
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தொடர்வுபட்ட நெருப்பு மேன்மேலும் வந்துற்றாற்போல ஒருவன் தனக்கு இன்னாதவற்றைப் பலகாற்செய்யினும் கூடுமாயின் வெகுளாதொழிதல் நன்று.
மேல் வலியவன் பொறுக்க வேண்டுமென்றார் அவன் பொறுக்குங்கால் தீமை செய்யினும் பொறுக்க வேண்டுமென்றார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று- அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம்.
தீமையின் மிகுதி தோன்ற 'இணரெரி' என்றும் தீவினைப்பன்மை தோன்ற 'இன்னா' என்றும் முற்றத்துறந்தவரும் பொறுத்தலருமை தோன்றப் 'புணரின்' என்றுங் கூறினார். சினத்தீ கனல் தீயினுங் கொடிது என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து
செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது
சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) கொழுந்து விட்டெரிகிற நெருப்பைக் கொண்டு சுடுவது போன்ற துன்பம் செய்கிறவர்களிடத்திலும் கூட முடியுமானால் கோபம் கொள்ளாதிருப்பதே நல்லது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பல சுடர்களையுடைய பெரிய எரி (செருப்பு) எல்லாம் வந்து ஒன்றாகச் சேர்ந்து போன்ற துன்பத்தினை ஒருவன் செய்தாலும், கூடுமானால் அவன்மீது கோபிக்காதிருத்தல் நல்லது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
எரிகின்ற நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் ஒருவன் துன்பம் செய்தாலும் அவன்பால் கோபம் கொள்ளாத பண்பு மிக நன்று.
|
|
Translation
|
|
Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.
|
|
Explanation
|
|
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
|
|
Transliteration
|
|
Inareri Thoivanna Innaa Seyinum
Punarin Vekulaamai Nandru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|