Thirukural

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் அவன் தவத்தேடு தானமும் ஒருங்கே செய்வாரை விடச் சிறந்தவன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மனத்தோடு வாய்மை மொழியின்- ஒருவன் தன் உள்ளத்தோடு பொருந்த உண்மையைச் சொல்வானாயின்; தவத்தோடு தானம் செய்வாரின் தலை- அவன் தவமுந் தானமும் ஒருங்கே செய்தவரினுஞ் சிறந்தவனாவன். தவத்தோடு தானஞ் செய்வதினினும் உளத்தோடு பொருந்த உண்மை சொல்வது அரிதாதலால், "தவத்தோடு தானஞ் செய்வாரிற் றலை" என்றார்.
கலைஞர் உரை:
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனச் சாட்சிக்குப் பொய்யனாகாமல் வாயால் பொய்யே சொன்னாலுங்கூட அவன் மதிக்கத் தகுந்தவனாவானென்றால்) மனச் சாட்சிக்கும் மெய்யனாகி வாயாலும் மெய்யே பேசினால் அப்படிப் பட்டவன் தவமும் தாளமும் ஒருங்கே செய்கிறவர்களைவிடச் சிறந்தவள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தனது மனத்தோடு பொருந்திய வாய்மையினைச் சொல்லுவானானால், அவன் தானமும் தவமும் ஒருங்கே செய்பவரைவிட மேலானவனாவான்.
தமிழ்க்குழவி உரை:
மனத்தோடு ஒன்றி வாய்மையே மொழிந்து வாழ்வார் தவம் செய்வாரினும், தானம் செய்வாரினும் சிறந்தவராகக் கருதப்படுவார்.
Translation
Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined.
Explanation
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities.
Transliteration
Manaththotu Vaaimai Mozhiyin Thavaththotu Thaananjey Vaarin Thalai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 295