Thirukural

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார் - உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின்கண் நின்று அதற்கு ஏற்ப ஒழுகமாட்டார், களவின்கண் கன்றிய காதலவர் - களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையார். (உயிர் முதலியவற்றை அளத்தலாவது, காட்சி முதலாகச் சொல்லப்பட்ட அளவைகளான் உயிர்ப் பொருளையும், அதற்கு அநாதியாய் வருகின்ற நல்வினை தீவினைக்கு உற்ற விளைவுகளையும் அவற்றான் அது நாற்கதியுள் பிறந்து இறந்து வருதலையும், அது செய்யாமல் அவற்றைக் கெடுத்தற்கு உபாயமாகிய யோகஞானங்களையும், அவற்றான் அஃது எய்தும் வீட்டினையும் அளந்து உள்ளவாறு அறிதல். இதனை ஆருகதர் தருமத்தியானம் என்ப. அதற்கு ஏற்ப ஒழுகுதலாவது, அவ்வளக்கப்பட்டனவற்றுள் தீயனவற்றின் நீங்கி நல்லனவற்றின் வழி நிற்றல்.)
மணக்குடவர் உரை:
களவின்கண்ணே மிக்க ஆசையையுடையவர் நேரின்கணின்று ஒழுகுதலைச் செய்யமாட்டார். இது நேர் செய்ய மாட்டாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
களவின்கண் கன்றிய காதலவர்-களவின்கண் ஊன்றிய வேட்கை யுடையவர் ; அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார்-தமக்குரிய ஒழுக்க வரம்பின்கண் நின்று ஒழுக மாட்டார். அளவைகளால் உயிர்க்கு வரும் இன்பதுன்பக் கூறுகளை ஆராய்ந்தறிதல் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற்கே சிறப்பாக ஏற்குமாதலின், அறவூழ்கம் (தருமத்தியானம்) என்னும் ஆருகத மதக் கொள்கையைப் பரிமேலழகர் இங்குப் புகுத்துவது பொருந்தாது.
கலைஞர் உரை:
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதுமட்டுமல்ல; அவர்கள் திருட்டால் வரக்கூடிய பொருளைக் கணக்கிட்டுத் தம்முடைய சக்திக்கும் தகுதிக்கும் மீறிய காரியங்களையே செய்வார்கள். அதனால்) திருடுவதில் அதிக ஆசை கொண்டு விட்டவர்கள் தம்முடைய நிலைமைக்குத் தகுந்த வரையறையோடு அடங்கி வாழ்க்கை நடத்தமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயிர் முதலியவற்றை அளக்கும் சீரிய செந் நெறிக்கண் நின்று அதற்குத் தகுந்தபடி ஒழுக முடியா தவர்கள் யாரென்றால், களவு செய்வதிலேயே விருப்பம் உடையவர்கள் என்பதாகும். மிகுந்த
தமிழ்க்குழவி உரை:
திருடிப் பொருள் சேர்ப்பதில் பெரும் விழைவு கொள்பவர் அளவோடு பெற்று நிறைவாழ்வு வாழும் தன்மையில்லாதவர்கள்.
Translation
They cannot walk restrained in wisdom's measured bound, In whom inveterate lust of fraudful gain is found.
Explanation
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.
Transliteration
Alavinkan Nindrozhukal Aatraar Kalavinkan Kandriya Kaadha Lavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 286