|
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.
|
|
மணக்குடவர் உரை:
|
|
களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.
இது பொருள் நிலையாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
களவினால் ஆகிய ஆக்கம் -கனவினால் உண்டான செல்வம் ; ஆவது போல அளவு இறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றி அளவு கடந்து கெடும்.
'ஆக்கம்' தொழிலாகு பெயர். அளவிறந்து கெடுதலாவது, புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போவது போல், தான் போகும்போது முன்பிருந்த பழஞ் செல்வத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு போதலும் , இம்மைக்குப் பழியையும் மறுமைக்குத் தீவினையையும் உண்டாக்குதலுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத்
தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும்
அடித்துக் கொண்டு போய்விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
திருட்டுத் தொழிலால் அடையக்கூடிய செல்வம் அளவிட முடியாதபடி பெருகுவது போலக் காட்டி, திடீரென்று இல்லாது போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
களவினால் உண்டாகின்ற பொருள் வளர்வது போலத் தோன்றி அளவினைக் கடந்து அழியும். மேலும் அது பற்பல துன்பங்களையும் கொடுத்து அறத்தினையும் கொண்டுபோகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
களவினால் சேர்க்கின்ற செல்வமானது மிகுதியாகப் பெருகுவது போலத் தோன்றினாலும் ஒரே கணத்தில் முற்றிலும் அழிந்து விடும்.
|
|
Translation
|
|
The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.
|
|
Explanation
|
|
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.
|
|
Transliteration
|
|
Kalavinaal Aakiya Aakkam Alavirandhu
Aavadhu Polak Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|