|
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டு விட்டால் மொட்டை அடித்தலும் சடை வளர்த்தலுமாகிய புறக்கோலங்கள் வேண்டா.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்.
இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டியதில்லை.
சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும்.
"மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்
ஆகுல நீர பிற".
என்றதற் கேற்ப , கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டியதில்லை யென்பது இக்குறளாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு
துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி
வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு
ஏமாற்று வித்தையே ஆகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(உண்மையான துறவிக்கு வேடம் அவசியமில்லை.) உலகத்தால் பழியான காரியங்கள் என்று விலக்கப்பட்ட குற்றங் என்று களைக் செய்யாதிருந்தால் தலையை மொட்டையடித்துக் கொள்வது, தலைமுடி, தாடி முதலியவற்றை நீண்டு வளர விடுவது முதலான சின்னங்கள் வேண்டியதில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தவம் செய்பவர்களுக்குத் தலைமயிரை மழித்தலும் அல்லது சடையாக்கலும் ஆகிய வேடம் 'தவம் செய்வதற்கு என்று' தேவையில்லை. தவத்திற்கு ஆகாதது என்ற தீமையான ஒழுக்கத்தினை நீக்கி விட்டாலே போதுமானதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உலகம் பழித்துக் கூறம் தீய பழக்க வழக்கங்களைத் தவிர்த்துவிட்டால் ஒருவர்க்கு மொட்டையிடுதலும் முடி வளர்த்தலுமாகிய புறக்கோலம் தேவையில்லை.
|
|
Translation
|
|
What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?.
|
|
Explanation
|
|
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.
|
|
Transliteration
|
|
Mazhiththalum Neettalum Ventaa Ulakam
Pazhiththadhu Ozhiththu Vitin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|