Thirukural

மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.

மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக, மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப் பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான், அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி 'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
மாசு மனத்தின்கண் உண்டாக வைத்து மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு, பொருந்தாத விடத்திலே மறைந்தொழுகு மாந்தர் பலர். இது பலர்க்குக் கூடாவொழுக்க முண்டாகு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மனத்தது மாசு ஆக - தம் மனத்தின்கண் குற்றமிருக்கவும் ; மாண்டார் நீராடி - தவத்தால் மாட்சிமைப் பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி ; மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் - அதன்கண்ணே மறைந்தொழுகும் மாந்தர் உலகத்துப்பலர். 'மாசு' காம வெகுளி மயக்கங்கள். நீராடியதால் உடம்பழுக்கேயன்றி உள்ளத்தழுக்கு நீங்கிற்றிலர் என்பதை யுணர்த்த 'மனத்தது மாசாக' என்றார். மாண்டார் நீராடி' என்பதற்கு மாட்சிமைப் பட்டாரது நீர்மையை யுடையராய் என்று மணக்குடவர் உரைத்ததும் ஓரளவு பொருத்த முடையதே. 'நீராடி' இரட்டுறல்.
கலைஞர் உரை:
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
மனத்தில் கெட்ட நோக்கங்களை வைத்துக்கொண்டு அதற்காகவே துறவிகளைப்போல் வேடம் பூண்டு அதில் மறைந்து கொண்டு தம்முடைய இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளுகிற பொய்த் துறவிகளும் பல பேர் உண்டு.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அழுக்காகிய குற்றம் தனது மனத்தில் இருக்க மாட்சியமையுடையவராக நீரில் மூழ்கிக் காட்டித் தாம் அந்தத் தோற்றத்தில் மறைந்து வாழும் மாந்தர் உலகில் பலராவர்.
தமிழ்க்குழவி உரை:
மனத்தகத்து மாசுபடிந்திருக்க மாண்புடையார் போல் நடித்து நீராடி வஞ்சகமுடனே வாழும் மாந்தர்களும் உலகில் பலர் உண்டு.
Translation
Many wash in hollowed waters, living lives of hidden shame; Foul in heart, yet high upraised of men in virtuous fame.
Explanation
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).
Transliteration
Manaththadhu Maasaaka Maantaar Neeraati Maraindhozhuku Maandhar Palar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 278