|
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம்.
ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம்.
பாட வேறுபாடு:
அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது
|
|
கலைஞர் உரை:
|
|
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை
நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(புலால் உண்பது துறவறத்தான் செய்யவே தகாத காரியம். அவனுடைய யோக முயற்சிகளையும் யாகமுயற்சிகளையும் விடப் பலமடங்கு சிறந்தது புலால் உண்ணாமை.) அவிர்ப் பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைவிட உண்பதற்கென்று ஓர் உயிரைக் கொல்லாதிருப்பது மேல்
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெய்சொரிந்து வேள்விகள் வளர்த்து ஆண்டவனை வேண்டுவதைவிட ஓர் உயிரைக்கொன்று அதன் உடலை உண்ணாதிருத்தல் நன்று.
|
|
Translation
|
|
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
|
|
Explanation
|
|
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
|
|
Transliteration
|
|
Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|