Thirukural

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், 'உண்ணார்' என்றார்.)
மணக்குடவர் உரை:
குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார். உயிரினின்று நீங்கியது பிண மென்று உணர்தலின் உண்ணா ரென்றார். 'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.
கலைஞர் உரை:
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனால்) துன்பம் செய்வதை நீக்கிவிட்ட அறிவுடை யவர்கள் உயிரை நீக்கியதாகிய ஊனை உண்ணமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவினையுடையவர்கள் ஊர் உயிரிலிருந்து நீங்கி வந்த ஊனினை உண்ணமாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
நல்லது கெட்டதை நன்கறிந்த ஆன்றோர்கள், உயிர் பிரிந்த ஓர் உடம்பினை ஊன் என்று மகிழ்ந்து உண்ணமாட்டார்கள்.
Translation
Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave.
Explanation
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
Transliteration
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar Uyirin Thalaippirindha Oon

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 258