|
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை.
இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அதுபோல அருளைக்கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.
ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும்
சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு
இல்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
செல்வத்தைப் பாதுகாக்காதவனுக்குச் செல்வத்தால் வரும் நன்மைகள் இல்லை. அதைப்போல் (உயிர்களைப் பாதுகாக்காமல் உயிரை நீக்கி) ஊனைத் தின்பவர்களுக்கு அருளால் பெறக் கூடிய நன்மைகள் கிடைக்கமாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பொருளால் பயனடைதல் அதனைக் காப்பாற்றாதவர்களுக்கு இல்லை. அதுபோல அருளால் பயனடைதல் என்பது ஊன் தின்பவர்களுக்கு இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருட் செல்வத்தின் பயன், அதனைப் போற்றி நில்லார்க்கு இல்லை. அதுபோலவே ஊன்தின்று வாழும் ஒருவர்தம் உள்ளத்தில் அருள் ஆளுமை கொள்வதில்லை.
|
|
Translation
|
|
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate.
|
|
Explanation
|
|
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
|
|
Transliteration
|
|
Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|