Thirukural

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் , ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது. பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன் கூறினார்.)
மணக்குடவர் உரை:
ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
கொளல் நல் ஆறு எனினும் தீது - பிறரிடத்தினின்று வாங்குவது வீட்டுலகத்திற்கு நல்வழியென்று அறநூல் கூறினும் வாங்குவது தீயது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று - பிறருக்குக் கொடுப்பதால் அவ்வுலகத்தை அடைய முடியாதென்று அந்நூல் கூறினும், கொடுத்தலே நல்லது. உம்மை ஈரிடத்தும் எதிர்மறை, கொடுத்தல் தருதல் என்னும் சொற்களினும் ஈதல் என்னும் சொல்லே இவ்வதிகாரத்திற்கு ஏற்றதாம்.
கலைஞர் உரை:
பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஏழைகளுக்குக் கொடுப்பதில் புண்ணியத்தைக்கூட எதிர் பார்க்கக் கூடாது அப்படியிருக்க) நல்ல காரியத்துக்கானாலுங் கூட ஏழைகளிடத்திலிருந்து வாங்கக் கூடாது. மோட்சலோகம் கிடைக்காமற் போய்விடுவதானாலும் ஏழைகளுக்குக் கொடுப்பதே நல்லது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இராப்பது (யாசிப்பது) நன்னெறியாகும் என்று சொல்லுபவர்கள் இருந்தாலும் அது தீதான செயலாகும். ஈகையினைச் செய்வதால் மேலுலகம் அடைய முடியாதென்று சொன்னாலும் ஈதலே நன்று.
தமிழ்க்குழவி உரை:
நற்பணிகளுக்கே என்றாலும் கூட பிறரிடம் பொருளைப் பெறுவது நன்றன்று. மேலுலக வாழ்க்கை அமையாதென்ற போதும் பிறருக்கு வழங்கி மகிழ்தலே நல்லது.
Translation
Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still.
Explanation
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
Transliteration
Nallaaru Eninum Kolaldheedhu Melulakam Illeninum Eedhale Nandru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 222