|
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் , காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பிணிமருந்தாகித் தேடுவார்க்கு மறைதலில்லாத மரத்தை யொக்கும், செல்வமானது பெருந்தகைமையான்மாட்டு உண்டாயின்.
தப்புதலென்றது ஒளித்தலை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின், மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று - அது வேர்முதல் கொழுந்துவரை எல்லாவுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயனபடும் மரத்தையொக்கும்.
மரத்தை மருந்தென்றமையால் அதன் உறுப்புக்களெல்லாம் மருந்தாதல் அறியப்படும். சில மருந்துகள் சிலருடம்பிற்கு ஏற்காமையானும் சிறிது காலம் பொறுத்து ஆற்றல் கெடுதலானும், எல்லார்க்கும் என்றும் தப்பாது குணந்தரும் என்பதை யுணர்த்தத் ' தப்பா மரம் ' என்றார்.
மேற்கூறிய மூவேறுவமங்களும் ஊருணியென்பது எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும், பழுமரம் என்பது பலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் மருந்து மரம் என்பது சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்குமென்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்ததாகும். ' ஆல் ' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறருக்கு உதவிடும் பெருந்தன்மையாம் ஒப்புரவு உடையவனிடம்,
செல்வம் சேர்ந்தால் அது ஒரு நல்ல மரத்தின் எல்லா உறுப்புகளும்
மருந்தாகப் பயன்படுவது போன்றதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அறிவாளிக்கும் அன்பாளிக்கும் உயர்ந்தவனாகிய தியாகியின் ஒப்புரவு எப்படியென்றால்) பெருந்தன்மை யுள்ளவனிடத்தில் செல்வம் இருந்தால், இருந்தால், மூலிகைச் இலை, காய், பட்டை செடியானது தன் முதலியவைகளை மருந்துக்கென்று கொடுத்துக் கடைசியில் வேரோடும் தன்னைப் தன்னைப் பிடுங்கிக் கொள்ளவும் உதவுவது போலத் தன்னையே கூட அழித்துக் கொண்டு பிறருக்கு உபகாரமாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகை. யாளனிடத்தில் உண்டாகி இருக்குமேயானால், அது. பிணிகட்கு எல்லா உறுப்புக்களினாலும் மருந்தாகித் தப்பாத மரத்தினை ஒப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவரிடம் செல்வம் அமையின் அது, அடிமுதல்முடி வரை மருந்தாகப் பயன்படும் நன்மரத்திற்கொப்பாகும்.
|
|
Translation
|
|
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.
|
|
Explanation
|
|
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
|
|
Transliteration
|
|
Marundhaakith Thappaa Maraththatraal Selvam
Perundhakai Yaankan Patin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|