Thirukural

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.

ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன். இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் - ஒப்புரவு செய்வானும்செய்யாதானுமாகிய இருவகைச் செல்வருள், செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவன்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - மற்றச் செய்யாதவன் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படுவான். உயிருக்குரிய அறிவுஞ் செயலுமின்மையின், நடைப்பிணமென்றுங் கருதப்படாது பிணமென்றே இழிந்திடப்படுவான் என்றார்.
கலைஞர் உரை:
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவுபவனே உயிரோடு வாழ்பவன். உதவாதவன் இருந்தாலும் இறந்தவனாகவே எண்ணப்படுவான்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிறருடைய துன்பங்களைக் கண்டாலும் மனம் இரங்காதவர்கள் இருக்கிறார்களே) தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களே மற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து உதவி செய்கிறவன் தான் உயிருள்ள மனிதன். அந்த உணர்ச்சி இல்லாதவன் செத்த பிணத்துக்கே ஒப்பானவன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
உயிரோடு கூடி வாழ்பவன் என்பவன் உலக நடையினை அறிந்து வாழ்பவனாவான். அவ்வாறு அறிந்து வாழாதவன் செத்தவர்களுள் ஒருவனாக வைத்துக் கருதப்படுவான்.
தமிழ்க்குழவி உரை:
எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் கருதி உதவி வாழும் ஒருவரே உண்மையில் உயிர்வாழ்பவர். மற்றவர் செத்தவருள் ஒருவராகவே கருதப்படுவர்.
Translation
Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place.
Explanation
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows them not will be reckoned among the dead.
Transliteration
Oththa Tharavon Uyirvaazhvaan Matraiyaan Seththaarul Vaikkap Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 214