Thirukural

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.

ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன் தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின், தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க - தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (நல்வினை தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன் ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனக்குத் தான் நல்லவனாயின், யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைப் பிறர்க்குச் செய்யாதொழிக. இது தீவினைக்கு அஞ்சவேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தான் தன்னைக் காதலன் ஆயின்-ஒருவன் உண்மையில் தன்னைக் காதலிப்பவனாயின்; தீவினைப் பால் எனைத்து ஒன்றும் துன்னற்க-பிறர்க்குத் தீமை செய்யும் பகுதியொடு எத்துணைச் சிறிதும் பொருந்தற்க. பிறர்க்குச் செய்த தீவினை தப்பாது தனக்குத் துன்பம் விளைத்தலால், 'தன்னைத்தான் காதலனாயின்' என்றார். காதல் என்றது அறிவோடு கூடிய காதலை. தீவினைப் பகுதியொடு பொருந்தாமையாவது தீவினை செய்யாதிருத்தலே. ஒன்று என்னும் எண்ணுப் பெயர் இங்குச் சிறிதளவுப் பொருளினது.
கலைஞர் உரை:
தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.
சாலமன் பாப்பையா உரை:
தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பிறருக்குத் தீமை செய்யாதிருப்பது பிறருடைய பிறருடைய நன்மைக் காக அல்ல; தனக்குத் துன்பம் வரக்கூடாதென்று தன்னைத் தானே நேசிக்கிறவன் பிறருக்குத் தீங்குண்டாக்கும் செயல்களின் பக்கத்திற்குக்கூட நெருங்கக் கூடாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தன்னைத்தானே விரும்புவானானால் சிறிதளவும் பிறனுக்குத் தீச் செயல் ஒன்றேயாயினும் செய்யாதிருப்பானாக.
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் தன்னைத்தான் விரும்பி நிறைவோடு வாழ்பவனாக இருந்தால் எந்த நிலையிலும் தீய செயல்களில் ஈடுபடலாகாது.
Translation
Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near!.
Explanation
If a man love himself, let him not commit any sin however small.
Transliteration
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum Thunnarka Theevinaip Paal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 209