|
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும் இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? ('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், 'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி, 'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ?
இது யாவரோடும் பற்றிலரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம் நெருங்கிய வுறவினர் குற்றத்தையும் அவர்புறத்துத் தூற்றும் இயல்புடைய வன்னெஞ்சர்; ஏதிலார் மாட்டு என்னை கொல் - அயலார் செய்தியில் எத்தகையவராவார்.
'குற்றமும்' என்பது துன்னியாரை நோக்கிய சிறப்பும்மை, தூற்றுதல் என்பது களத்திற் பொலி தூற்றுதல்போலப் பலருமறியப் பரப்புதல். மிகக் கொடியவராவர் என்பது பற்றியும் அறியப்படாமை பற்றியும் 'என்னை கொல்' என்றார். 'என்னர் கொல்' என்னும் பாடமும் ஏற்றதே. 'கொல்' ஐயம்.
|
|
கலைஞர் உரை:
|
|
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற
குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச
மாட்டார்கள்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாகும்படி புனைந்து பேசி, மனமொத்த நண்பர்களையும் பிரித்துவைத்து விடுவார்கள். மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியாது. 189 (இப்படிப்பட்டவர்களை இந்த உலகம் ஏன் சுமந்து கொண்டிருக்கிறது?) ஒருவன் இல்லாத சமயம் பார்த்து அவனைப் பற்றிப் பொய்களைச் சொல்லிக் கோள் மூட்டுகிறவனுடைய பாரத்தையும் இந்தப் பூமி சுமந்துகொண்டிருப்பது தன் கடமையைக் கருதியோ?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம்முடன் நெருங்கிப் பழகுபவர்களுடைய குற்றத்தினையும் அவரில்லாதபோது தூற்றிப் பேசுபவர்கள் அயலார் மாட்டுச் செய்வது யாதோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெருங்கிய நண்பினர்கள் பற்றியும் வெளியில் புறங்கூறித் திரிபவர்கள், அறியார் மாட்டுகாணும் குற்றங்களை எவ்வளவு பெரிதுபடுத்தி உரைப்பர்?
|
|
Translation
|
|
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?.
|
|
Explanation
|
|
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?.
|
|
Transliteration
|
|
Thunniyaar Kutramum Thootrum Marapinaar
Ennaikol Edhilaar Maattu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|