Thirukural

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.

மகிழும்படியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை என்று தெளியாதவர் தம்மை விட்டு நீங்கும்படியாகப் புறம் கூறி நண்பரையும் பிரித்து விடுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் - கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர் என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன் கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை' தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும் பகையாவர் என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
நீங்கும்படி சொல்லித் தங் கேளிரானாரைப் பிரிப்பர்: மகிழச் சொல்லி நட்பாடலை உயர்வுபண்ண மாட்டாதார். இது நட்டவரை யிழப்பர் என்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி அயலாரோடும் நட்பாடல் தமக்கு நன்றென்று தெளியாத புறங்கூற்றாளர்; பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - பிளவுண்டாகுமாறு புறங்கூறித் தம் உறவினரையும் தம்மை விட்டுப் பிரியப்பண்ணுவர். கேளிரையும் என்னும் சிறப்பும்மை தொக்கது. நட்பாடல் என்னுங் குறிப்பால் அயலாரோடும் என்பது வருவிக்கப்பட்டது. அவ்வும்மை எச்சவும்மை. தம் கேளிர் என்னாது கேளிர் என்று மட்டுங் குறித்ததினால், பிறரினத்தார்க்குள்ளும் புறங்கூற்றாற் பிரிவினையுண்டாக்குவர் என்பது பெறப்படும். இங்ஙனம் எல்லார்க்கும் பொல்லாதவராவர் என்பது கருத்து. தேறாதவர் என்னும் தன்வினை தேற்றாதவர் என்று பிறவினை வடிவில் நின்றது, "கனவிலுந்தேற்றாதார் மாட்டு" (குறள்: 1054) என்புழிப்போல.
கலைஞர் உரை:
இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக் கெடுமளவுக்குப் புறங்கூறி நண்பர்களை இழந்து விடுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
கூடி மகிழுமாறு இனியன பேசி நட்பை வளர்க்கத் தெரியாதவர், புறம்பேசி நண்பர்களையும் பிரித்து விடுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(கோள் சொல்லுகிறவர்கள்) பிளவு உண்டாகும்படி புனைந்து பேசி, மனமொத்த நண்பர்களையும் பிரித்துவைத்து விடுவார்கள். மகிழ்ச்சி உண்டாகும்படி நல்ல வார்த்தைகளைச் சொல்லி நட்புண்டாக்குவது அவர்களுக்குத் தெரியாது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இனிய சொற்களைச் சொல்லி அயலாருடன் நட்புச் செய்தலினை அறியாதவர்கள், தம்மைவிட்டு நீங்குமாறு புறம் பேசிக் சுற்றத்தார்களையும் பிரியுமாறு செய்வர்.
தமிழ்க்குழவி உரை:
மகிழ்வோடு பேசி மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் பண்பில்லாதவர்கள், பலவாறாகப்பொய்பேசி இனிய உறவுகளையும் பிரித்து விடுவர்.
Translation
With friendly art who know not pleasant words to say, Speak words that sever hearts, and drive choice friends away.
Explanation
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
Transliteration
Pakachchollik Kelirp Pirippar Nakachcholli Natpaatal Thetraa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 187