|
அறநெறியால் பெறும் இன்பத்தை விரும்புகின்றவர், நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர்பால் வௌவிய பொருளால் தாம் எய்தும் நிலையில்லாத இன்பத்தை விரும்பி, அவர் மாட்டு அறன் அல்லாத செயல்களைச் செய்யார்; மற்று இன்பம் வேண்டுபவர் - அறத்தான் வரும் நிலையுடைய இன்பத்தை காதலிப்பவர். ['பாவத்தான் வருதலின் அப்பொழுதே அழியும்' என்பார், 'சிற்றின்பம்' என்றார். 'மற்றையின்பம்' என்பது 'மற்றின்பம்' என நின்றது.]
|
|
மணக்குடவர் உரை:
|
|
சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர்.
இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யார் - பிறர் பொருளைக் கவர்வதால் தாம் அடையும் நிலையில்லாத சிற்றளவான தீய இன்பத்தை விரும்பி அறனல்லாத செயல்களைச் செய்யார்; மற்றின்பம் வேண்டுபவர் - அறத்தால் வருவதும் நிலையானதும் பேரள வினதுமான வேறு நல்லின்பத்தை வேண்டும் அறிவுடையோர்.
இன்பத்தின் சிறுமை காலமும் அளவும் தீமையும் பற்றியது. மற்று வேறு. ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன்
கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறத்தால் வரும் நிலையான இன்பங்களை விரும்புவோர் நிலையில்லாத இன்பத்தை விரும்பிப் பிறர் பொருளைக் கவரும் அறம் இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பழிச் சொல்லுக்கு மட்டுமல்ல; பாவம் வருமென்று அஞ்சுகிறவர்களும் உண்டு.) புண்ணியத்தால் வரக்கூடிய பேரின்பத்தை விரும்புகிறவர்கள், உடனே கிடைக்கிற சிற்றின் பங்களுக்கு ஆசைப்பட்டுத் தர்மமல்லாத காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தான் வரக்கூடிய நிலையான இன்பத்தினை விரும்புகிறவர்கள் பிறருடைய பொருளை வஞ்சித்து அடையும் சிறிய இன்பத்திற்கு ஆசைப்பட்டுத் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறவழியில் பெறும் பேரின்ப நிலையை விரும்புவர்கள் சிற்றின்பம் வேண்டி அறன் அல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
|
|
Translation
|
|
No deeds of ill, misled by base desire,
Do they, whose souls to other joys aspire.
|
|
Explanation
|
|
Those who desire the higher pleasures (of heaven) will not act unjustly through desire of the trifling joy. (in this life).
|
|
Transliteration
|
|
Sitrinpam Veqki Aranalla Seyyaare
Matrinpam Ventu Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|