|
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அழுக்காறு உடையானை - பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் - திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். 'தவ்வையைக் காட்டி' என்பது 'அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே' (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். 'மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை' என்று உரைப்பாரும் உளர்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம்,
இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அழுக்காறு உடையானை-பிறராக்கங் கண்டவிடத்துப் பொறாமை கொள்பவனை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டி விடும்-செங்கோலத்தினளாகிய திருமகள் தானும் பொறாது தன் அக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விட்டு நீங்கும்.
அவ்வை அக்கை. தம் அவ்வை தவ்வை; தம் அக்கை தமக்கை என்பது போல. திருமகளின் அக்கை வறுமைக்குத் தெய்வமாதலின், அவளுக்குக் காட்டுதல் என்பது இரண்டாம் வேற்றுமையுருபு நாலாம் வேற்றுமைப் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். 'விடும்' என்பது இங்குத் தலைமையாய் வந்த தனிவினை.
|
|
கலைஞர் உரை:
|
|
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி
என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு
அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று
விடுவாள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அவன் செல்வமுடையவனாக இருந்தாலும் அது போய் வறுமை வந்து விடும். எப்படியெனில்) பொறாமைப் படுகிறவனிடத்தில் வெறுப்புக்கொண்டு சீதேவியானவள் தன் அக்காளாகிய மூதேவியிடம் அவனைக் காட்டிவிட்டு அவனை விட்டுப் போய்விடுவாள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறருடைய செல்வம் கண்டபோது பொறாமைப் படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொறாமைப் பண்புடைய ஒருவனைக் கண்டு திருமகள் தன் தமக்கையாம் வறுமையை (மூதேவியை)க் காட்டி விட்டுத் தான் அகன்று விடுவாள்.
|
|
Translation
|
|
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey.
|
|
Explanation
|
|
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
|
|
Transliteration
|
|
Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval
Thavvaiyaik Kaatti Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|