|
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் - மறுமைக்கும் இம்மைக்கும் அறமும் செல்வமும் ஆகிய உறுப்புக்களைத் தனக்கு வேண்டாதான் என்று சொல்லப்படுவான்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கு அறுப்பான் - பிறன் செல்வம் கண்டவழி அதற்கு உதவாது அழுக்காற்றைச் செய்வான். ('அழுக்கறுத்தல்' எனினும் 'அழுக்காறு' எனினும் ஒக்கும். அழுக்காறு செய்யின் தனக்கே ஏதமாம் என்பதாகும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தனக்கு அறனாகிய வாழ்வு வேண்டாதானென்று சொல்லப்படுவான், பிறனுடைய ஆக்கத்தை விரும்பாதே அழுக்காறு செய்வான்.
இஃது அழுக்காறுடையார்க்குப் புண்ணிய மில்லையாமென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆக்கம் அறன் வேண்டாதான் என்பான் -இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய செல்வமும் அறமும் ஆகிய பேறுகளைத் தனக்கு வேண்டாதவனென்று சொல்லப்படுகின்றவன்; பிறன் ஆக்கம் பேணாது அழுக்கறுப்பான்- பிறன் செல்வங் கண்ட விடத்து அதற்கு மகிழாது பொறாமைப்படுபவனாவன்.
பொறாமைக்காரன் பிறனுக்கு ஒரு தீங்குஞ் செய்ய இயலாது தனக்கே கேட்டை வருவித்துக் கொள்கின்றான் என்பது, இதனாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர்
பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(பொறாமையினால்தான்) பல பாவச் செயல்களைச் செய்து தர்மபலம் குறைகிறது.) பிறருடைய நல்வாழ்வைக் கண்டு பொறாமைப் பட்டுக்கொண்டிருப்பவன் தர்ம பலத்தை இகழ்ந்து விடுகிறவன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறத்தினையும் செல்வத்தினையும் வேண்டாம் என்று சொல்லுகின்றவன், மற்றவன் செல்வத்தைக் கண்டபோது தாளாமல் பொறாமைப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தமக்கு அறமும் செல்வமும் அமைய வேண்டாமென்று எண்ணும் ஒருவனே பிறர் வளமையைக் கண்டு மகிழாமல் பொறாமை கொள்வான்.
|
|
Translation
|
|
Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain.
|
|
Explanation
|
|
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth".
|
|
Transliteration
|
|
Aranaakkam Ventaadhaan Enpaan Piranaakkam
Penaadhu Azhukkarup Paan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|