|
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
துறந்தாரின் தூய்மை உடையர் - இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்; இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர் - நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர். (தூய்மை : மனம் மாசு இன்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர், துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார்.
இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இறந்தார் வாய் இன்னாச் சொல் நோற்கிற்பவர்-நெறி கடந்த கீழ் மக்களின் வாயினின்று வரும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய மேன்மக்கள்; துறந்தாரின் தூய்மை உடையர் - இல்லறத்தின் கண் நின்றாலும் துறவியர் போல மனத் தூய்மையுடைய ராவர்.
'வாய்' என மிகைபடக் கூறியது, கீழோர் வாயினின்று தீய சொற்களே மிகுதியாக வரும் என்பதை உணர்த்தற்கு. ஐந்தாம் வேற்றுமை யின்னுருபு உறழ் பொருளிற்கே யுரியதாதலால், துறந்தாரைவிடத் தூயர் எனினுமாம். சுடுகின்ற வெயிலைப் பொறுத்தலினும் சுடுகின்ற சொல்லைப் பொறுத்தல் அரிதாதல் காண்க. 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. வெயில் பிறப்பிக்காத சினத்தைச் சுடுசொல் பிறப்பித்தலால், அதைப் பொறுத்துக் கொள்ளுதலே மிகுந்த மனத் தூய்மையைக் காட்டும் என்பது கருத்து.
|
|
கலைஞர் உரை:
|
|
எல்லை கடந்து நடந்துகொள்பவர்களின் கொடிய சொற்களைப்
பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கோபத்தால் ஒருவன் முறை தவறிப் பேசுகின்ற துன்பந்தரும் வசைகளையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ளுகிறவர்கள் துறவிகளைக் காட்டிலும் சுத்தமான சகிப்புள்ளவர்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நல்வழியிலிருந்து நீங்கியவர்களுடைய தீய சொற்களைப் பொறுத்துக் கொள்ளுபவர்கள், துறவறம் பூண்ட முனிவர்களைப் போலத் தூய்மையுடையவர்கள் ஆவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வரன்முறையற்றவரின் வாயிலிருந்து வெளிப்படும் புன்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் துறந்தாரினும் மேலாம் தூய்மை உடையவராவார்.
|
|
Translation
|
|
They who transgressors' evil words endure
With patience, are as stern ascetics pure.
|
|
Explanation
|
|
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics.
|
|
Transliteration
|
|
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai
Innaachchol Norkir Pavar
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|