|
( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர். (ஒறுத்தவர் தாமும் அத் தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாகவையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார். பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றுவார் உலகத்தார்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒறுத்தாரை ஒன்றாக வையார் - பிறன் செய்த தீங்கைப் பொறாது அவனைத் தண்டித்தாரை அறிவுடையோர் ஒரு பொருட்டாகக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் - ஆனால் அத்தீங்கைப் பொறுத்தாரையோ பொன்போற் போற்றி வைத்துக் கொள்வர்.
தீங்கு செய்தவனைத் தண்டித்தவரும் அத் தீங்கு செய்தவனை யொத்தலின் , 'ஒன்றாக வையார்' என்றார். பொன்போற் பொதிதலாவது மிக மேன்மையாகப் போற்றுதல். ஏகாரம் தேற்றம்.
|
|
கலைஞர் உரை:
|
|
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை
உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்
கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
தீங்குக்குத் தீங்கு திருப்பிச் செய்து விடுகிறவனைக் குறிப் பிடத் தகுந்த ஒரு மனிதனாக யாரும் மதிக்கமாட்டார்கள். ஆனால் தீங்கு செய்தவனையும் மன்னித்துவிடுகிறவனை, மிகவும் குறிப்பிடத் தக்கவனாக மதித்து அவனுடைய பொறுமைக் குணத்தை எல்லோரும் தம்முடையை மனத்தில் போற்றி வைப்பார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிறன் தமக்குத் தீமை செய்தால் பொறுமை இழந்து, தண்டித்தவர்களைப் பெரியோர்கள் ஒரு பொருளாக மனத்திற் கொள்ள மாட்டார்கள். பொறுத்துக்க கொண்டவர்களை எப்போதும் நினைத்து மனத்தில் பொன்போல் கொள்ளுவார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தனக்குத் தீங்கிழைத்தவர்பால் வெகுண்டு தண்டிப்பவர் களை எவரும் ஒரு பொருட்டாகக் கருதார். ஆனால் மன்னித்து விடுபவர்களைப் பொன்போல் போற்றுவர்.
|
|
Translation
|
|
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
|
|
Explanation
|
|
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
|
|
Transliteration
|
|
Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar
Poruththaaraip Ponpor Podhindhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|