|
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல-தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம் போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம். (இகழ்தல்; மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுபவர்களைப் பொறுத்தல் தலைமையாம்.
இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அகழ்வாரைத் தாங்கு நிலம்போல - தன்னைத் தோண்டுவாரை விழாமல் தாங்கும் நிலம்போல;தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை - தம்மை மதியாது தீங்கு செய்தாரைப் பொறுத்தல் தலையாய அறமாம்.
இகழ்தல் புகழ்தலுக்கு எதிர். அது இங்கு மதியாது சொல்லும் சொல்லை மட்டுமன்றிச் செய்யுஞ் செயலையுங் குறித்தது.
|
|
கலைஞர் உரை:
|
|
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை
இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே
தலைசிறந்த பண்பாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
குழி தோண்டுவதற்குத் தன்னையே வெட்டுகின்ற மனிதரைத் தானே சுமந்து கொண்டிருக்கிற நிலத்தைப் போல, ஒருவன் தன்னை அவமதித்தவர்களிடம் பொறுமை காட்டி மன்னித்து, அவர்களுக்கு உதவியும் தானே செய்வது, மிக உயர்ந்த பொறையுடைமைக் குணம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன்னைத் தோண்டுபவர்களையும் கீழே வீழாமல் தாங்கிக்கொண்டிருக்கும் நிலத்தினைப் போலத் தம்மை இகழ்பவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையான அறமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தம்மை அகழ்பவரையும் தாங்கிக் கொள்கின்ற நிலம் போலத் தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையாய பண்பாகும்
|
|
Translation
|
|
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
|
|
Explanation
|
|
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.
|
|
Transliteration
|
|
Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|