|
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக.('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்)
|
|
மணக்குடவர் உரை:
|
|
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஒளியிழை மன் ஊடுக - ஒளி வீசும் அணிகலங்களையுடையாள் இன்னும் எம்மொடு மிகுதியும் ஊடுவாளாக; யாம் இரப்ப இரா மன் நீடுக- அவள் அங்ஙனம் ஊடுதற்கும் யாம் அதை யுணர்த்தும் பொருட்டு அவளை இரந்து நிற்றற்கும் போதிய அளவு காலமிருக்கும் வகை இவ்விரவு மிகுதியும் நீடுவதாக.
'ஊடுக' , 'நீடுக' என்பன ஆர்வ வியங்கோள் வினைகள். 'மன்' மிகுதிப்பொருளது ஓகாரங்கள் அசைநிலை. 'ஒளியிழை' அன்மொழித்தொகை. பின்னர்ப் பேரின்பம் பெறக் கூடுதல் உறுதியாதலின், அவ்விராமுழுதும் ஊடலே நிகழினும் நன்றேயென்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு
இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எவ்வளவு காலம் பிரிந்திருந்தாலும் அவ்வளவும் நல்லதுதான்.) காதலி இனிமேல் பிணங்கியே இருக்கட்டும். அந்தப் பிணக்கம் இரவு முழுதும் நீடிக்க வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்ளுகிறேன்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒளிமாண் அணியிழை பூண்ட இவள் என்னோடு மேலும் ஊடுவாளாக, ஊடலைத் தணிக்க யான் இரந்து நிற்க, இவ்விராப் பொழுது நீடுவதாகுக.
|
|
Translation
|
|
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.
|
|
Explanation
|
|
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.
|
|
Transliteration
|
|
Ootuka Manno Oliyizhai Yaamirappa
Neetuka Manno Iraa
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|