Thirukural

ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும்; விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை. (அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக்கூட்டம் முடியாது' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.) ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று. இதற்குப் பரிமேலழகருரை வருமாறு - (உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.) ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை. என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(காதலி ஏங்குகிறாள்;) இவ்வளவு நேரமாக என்னைப் பிணக்கத்தில் வாடவிட்டிருக்கிற காதலர் என்னைப் புணர்வார் என்ற ஆசை எனக்கு விட்டுப் போய்விட்டது. ஆனால் என் மனம் இன்னும் ஆசைப்படுகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தான் ஊடலினால் மெலிந்து நிற்கவும் விட்டிருக்க வல்லவரான காதலருடன் கூடக்கடவோம் என்று எனது நெஞ்சம் முயலுதற்குக் காரணம் தனது ஆசையேயாகும்.
தமிழ்க்குழவி உரை:
நீரும் நிழலோடு இருந்தால் தான் இனிது. அது போல் ஊடலும் அன்புடையவர் மாட்டு இருந்தால் தான் இனிதாகும்.
Translation
Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire
Explanation
It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike
Transliteration
Ootal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu Avaa

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1310