|
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து.
இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.)
துன்பத்திற்கு -ஒருவர்க்குத் துன்பம் வந்தவிடத்து அதை நீக்குதற்கு ; தாம் உடைய நெஞ்சம் துணையல்வழி- தம்முடன் பிறந்து தம் முறுப்பாக இரண்டறக் கலந்திருப்பதும் தமக்குதவ முழுக்கடைமைப்பட்டிருப்பதுமான உள்ளமே துணையாயிருந்து உதவாத விடத்து ; யாரே துணையாவார் - வேறுயார்தான் துணையாக வந்து உதவுவார்?
துன்பம் என்றது இங்கு உணர்ப்புவயின் வாரா ஊடலை . அஃதாவது தலைமகன் தெளிவிக்கவுந் தெளியாத தலைமகள் சடைவை . அதற்கு நெஞ்சந் துணையாகாமையாவது , அவளை யன்பிலளென்று விட்டு நீங்காது அவளோடு கூடற்கண் விதும்பல் . வாழ்க்கைத்துணையும் எனக்குத் துணையாகாது என் அந்தக்கரணமும் எனக்குத் துணையாகாது போனபின் , நான் இத்துன்பத்தை எங்ஙனந் தாங்குவேன் என்பதாம் . ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக
இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
ஒருவருக்குத் துன்பம் வந்துவிட்டால் சமயத்தில் அவருடைய மனமே அவருக்கு உதவாவிட்டால் மற்ற யார் உதவி செய்யப் போகிறார்கள்? (நீயே சொல்லு. என் மனமே!)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உயிரின்மீது காதலையுடைய எனது நெஞ்சு நம்மை ஏளனம் செய்து சென்றார் என்று நாமும் ஏளனம் செய்வோமாயின், பின் நமக்கே இழிவாகும் என்று எண்ணி அவர் திறத்தினையே நினைத்துக் கொண்டிருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நெஞ்சந் துணையல் வழி துன்பம்வரும் போது ஒருவருக்கு அவருடைய நெஞ்சமே துணையாக வரவில்லை எனில் வேறு யார் வருவார்?
|
|
Translation
|
|
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?.
|
|
Explanation
|
|
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one? .
|
|
Transliteration
|
|
Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya
Nenjan Thunaiyal Vazhi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|