Thirukural

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு.

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.)
மணக்குடவர் உரை:
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு-தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லா மடநெஞ்சின் சேர்க்கையினால் ; நாணும்மறந்தேன்-என் உயிரினுஞ் சிறந்த நாணையும் மறந்துவிட்டேன். மாணாமை மானத்தைக் காத்துக்கொள்ளாமை . மடமை,கண்டபோது நினைத்துக் காணாதபோது மறக்கவேண்டிய தவற்றைக் காணாதபோது நினைத்துக் கண்டபோது மறத்தல். நாண் , பல்லாண்டு கூடியொழுகிய பின்பும் அன்று கண்டாற்போல் உள்ளமும் உடம்பும் ஒடுங்குதல். எஞ்ஞான்று மெங்கணவ ரெந்தோள்மேற் சேர்ந்தெழினும் அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் (நாலடி.385) கண்டபொழுதே புணர்ச்சி விதும்பலால் ' நாணும் மறந்தேன் ' என்றாள். உம்மை உயர்வு சிறப்பு.
கலைஞர் உரை:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
காதலரைச் சிறிதுகூட மறக்க முடியாததாகி விட்ட என் புத்திகெட்ட அற்ப மனசோடு சேர்ந்து நான் மானங்கெட்டவளாகி விட்டேனே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத எனது மாட்சிமையில்லாத மட நெஞ்சுடனே கூடி, என் உயிரினும் சிறந்த நாணத்தினையும் மறந்துவிட்டேன்.
தமிழ்க்குழவி உரை:
அவரை மறக்க இயலாத காதலால், மாண்பிழந்து மடமை சேர்ந்த நெஞ்சத்திற்காட்பட்டு என் நாணத்தையும் இழந்து விட்டேன்.
Translation
Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame.
Explanation
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
Transliteration
Naanum Marandhen Avarmarak Kallaaen Maanaa Matanenjir Pattu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1297