|
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது.) பெறாமை அஞ்சம் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று. (காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும் , 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காதலரைப் பெறாதகாலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ்சும்; பெற்றோமாயின் பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால் இடைவிடாத துன்பத்தை உடைத்து என்னெஞ்சு.
இது தலைமகள் ஆற்றாமைகண்டு தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந்தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனொடு புலந்து கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(வாயிலாகச் சென்ற தோழிகேட்பத் தலைமகள் சொல்லியது.)
பெறாமை அஞ்சும்-காதலரைப் பெறாதபோது அப்பெறாமைக்கு அஞ்சுகின்றது ; பெறின் பிரிவு அஞ்சும்-பெற்றபோதோ எதிர்காலத்தில் நேரக் கூடிய பிரிவைக் கருதிக்கொண்டு அதற்கு அஞ்சுகின்றது;என் நெஞ்சு அறா இடும்பைத்து- இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தையுடையதா யிருக்கின்றது.
பெறாதபோது கலவியின்மை பற்றியும் பெற்றபோது கலவிதொடராமை பற்றியும் அச்சம் உண்டாவதால் , என் வாழ்க்கை எப்போதும் துன்பவாழ்க்கையே என்பதாம். அஞ்சுதல் அஞ்சி வருந்துதல் , ' பெறாஅமை,' அறாஅ இசைநிறை யளபெடைகள்.
|
|
கலைஞர் உரை:
|
|
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது.
காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ
பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
காதலர் இல்லாதபோது அவர் வரவில்லையே என்று கவலைப்படச் செய்கிறது. (இந்த மனம்) வந்துவிட்டால் பிரிந்துவிடுவாரோ என்று கவலைப்படச் செய்கிறது. என்னுடைய நெஞ்சம் எனக்கு ஓயாத துன்பமுண்டாக்குவதாக இருக்கிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
காதலரைப் பெறாதபோது அவ்வாறு பெறாதிருப்பதற்கு அஞ்சுகின்றது. அவரைப் பெற்றால் பிரிவாரோ என்பதை நினைத்து அஞ்சுகின்றது. ஆதலால் எனது நெஞ்சம் எப்போதும் நீங்காத துன்பத்தினை உடையதாக இருக்கின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலரைக் காணாத பொழுது அதற்காக வருந்துவதும், கண்ட பொழுது பிரிவு நேரிடுமோ என்று வருந்துவதும் ஆக எப்போதும் நெஞ்சே, நீ துன்பத்தில் உழலுகிறாய்
|
|
Translation
|
|
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.
|
|
Explanation
|
|
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
|
|
Transliteration
|
|
Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|