|
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(இதுவுமது) எம் காதலர் நெருநற்றுச் சென்றார் - எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போனார் ; யாமும்மேனி பசந்து எழுநாளேம்- அப்பிரிவிற்கு யாமும் மேனி பசலை யடைந்து எழுநாட் கழிந்த நிலையில் இருக்கின்றேம் . நேற்றுச் செய்த பேரின்பக் கூட்டத்தால் பிரிவு துணியப் பட்ட தென்பாள் ' நெருநற்றுச் சென்றார் ' என்றும் , அதனை எழு நாட்கு முன்பே ஐயுற்றதனால் அன்றே மேனி பசந்த தென்பாள் ' மேனிபசந்தெழு நாளேம் ' என்றும் , கூறினாள் . இதனால் தலைமகன் பிரிதற்குறிப் புணர்த்தப் பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
என் காதலர் என்னை விட்டுப் பிரிந்த மறுநாளே ஏழுநாள் பிரிந்திருந்தது போல என் மேனி பசந்துவிட்டது. இவர் எவ்வளவு நாள் பிரிந்திருந்து விட்டார் என்ற கணக்கை என்மேனிப் பசப்பின் அளவே காட்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எம் காதலர் நேற்றுதான் பிரிந்து போனார். அப்பிரிவினால் யாமும் மேனி பசந்து பல நாட்கள் உடையேம் ஆனோம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நேற்றுத் தான் காதலர் பிரிந்துச் சென்றார். அதற்குள்ளாக ஏழு நாட்கள் சென்றது போல என்மேனி பசலை படர்ந்து பொலிவிழந்து போனது.
|
|
Translation
|
|
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!.
|
|
Explanation
|
|
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
|
|
Transliteration
|
|
Nerunatruch Chendraarem Kaadhalar Yaamum
Ezhunaalem Meni Pasandhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|