Thirukural

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு. (முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)
மணக்குடவர் உரை:
மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு. இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல்-மொட்டின் முகப்பிற்குள் அடங்கிக் கிடந்து வெளியிற் பரவாத மணம் போல ; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு-என் இளங்காதலியின் நகை யரும்பும் முறுவலுக்குள் உள்ளதாய் வெளியில் தோன்றாத தொரு குறிப்புண்டு. நகை புணர்ச்சி யின்பத்தால் தோன்றும் மகிழ்ச்சி வெளிப்பாடு.
கலைஞர் உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை:
மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்காமல் கோபித்தவள் போல் நிற்கிறாளானாலும்) இதழ் விரியாவிடினும் மலரப் போகிற பூ மொட்டின் உள்ளேயிருக்கிற மணம் வெளியிலும் வீசுவதுபோலப் பல் தெரியாதபடி குவிந்திருக்கிற இவளுடைய உதடுகளுக்குள்ளே சிரிப்பு இருக்கிறது எனக்குத் தெரிகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மலராத மொட்டுக்குள்ளிருந்து வெளியே புலப்படாத மணத்தினைப் போல இப்பெண் என்னுடன் நகைக்கக்கருதும் முகிழப்பினுள் ஒரு குறிப்பு உண்டு.
தமிழ்க்குழவி உரை:
மலர் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணம் போல எம் காதலியின் மெல்லிய புன் முறுவலுக்குள் ஒரு மோகனம் மறைந்துள்ளது.
Translation
As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes.
Explanation
There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
Transliteration
Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai Nakaimokkul Ulladhon Runtu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1274