Thirukural

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்றநாளொற்றித் தேய்ந்த விரல்.

என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகள் காண்டல் விதுப்பினால் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த - அவர் நம்மைப் பிரிந்து போன நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை. (நாள் - ஆகுபெயர். புல்லியவாதல் - நுண்ணிய காணமாட்டாமை. 'ஒற்ற' என்பது 'ஒற்றி' எனத் திரிந்து நின்றது. இனி யான் காணுமாறு என்னை? என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)
மணக்குடவர் உரை:
கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல்லென்றன: விரல்களும் அவர்போன நாள்களை யெண்ணி முடக்குதலாய்த் தேய்ந்தன. இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது.) அவர் சென்ற நாள் ஒற்றி விரல் தேய்ந்த- அவர் எம்மைவிட்டுப் பிரிந்துபோன நாட்களைச் சுவரிற்குறித்த குறிகளைத் தொட்டுத் தொட்டு எண்ணுதலால், என் விரல்கள் தேய்ந்து போயின. கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற- அதுவுமன்றி என் கண்களும் அவர்வரும் வழியைப் பார்த்துப்பார்த்து ஒளியிழந்து பூத்துப்போயின. இவ்வாறாயும் இன்னும் அவர் வரக்காணேன். இனி அவரைக் காணுமாறுண்டோ வென்பதாம். 'வாள்' உரிச்சொல். புற்கென்னுதல் பொலிவற்று நுண்பொருள்களைக் காணமுடியாமை. 'நாள்' ஆகு பொருளி. நாளெண்ணுதலும் வழி பார்த்தலும் இடைவிடாது நிகழ்தலின் விதும்பலாயிற்று.
கலைஞர் உரை:
வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(நிறையழிந்த காதலி காமம் மேலிட்டுக் காதலனை' வேகமாக நினைத்துச் சொல்லுகிறாள்:) அவர் என்னைப் பிரிந்துள்ள நாட்களை விரல்விட்டு எண்ணியெண்ணி என் விரல்களும் தேய்ந்துவிட்டன. என் கண்களும் அழுதழுது பிரகாசமில்லாமல் வறண்டு போய்விட்டனவே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்களைச் சுவரில் இழைத்து வைத்து அவைகளைத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்தன. அவர் வருகின்ற வழிபார்த்து எனது கண்களும் ஒளியிழந்து போயின.
தமிழ்க்குழவி உரை:
அவர் பிரிந்துச் சென்ற நாட்களை எண்ணி எண்ணிச் சுவரில் கோடிட்டு விரல்கள் தேய்ந்தன. ஒளியிழந்து கண்களும் மங்கின.
Translation
By My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn.
Explanation
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
Transliteration
Vaalatrup Purkendra Kannum Avarsendra Naalotrith Theyndha Viral

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1261