Thirukural

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.
தேவநேயப் பாவாணர் உரை:
(இதுவுமது) நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு- கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவதுபோலக் காதலரைக் கண்டவுடன் நிறையழிந்துருகும் உள்ளத்தையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ- அவர் அணுகி நிற்க யாம் ஊடி அந்நிலையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உளதோ? இல்லையே! யான் அத்தன்மையே னாகலின் அந்நிலைமையில்லை யென்பதாம் புணர்தல் தலைக்கூடி நிற்றல். அவர் புணர்ந்து, யாம் ஊடிநிற்பேம் என்பது, மணியடித்து வண்டி புறப்பட்டது என்றாற்போன்ற தனிநிலைக் கிளவியச் (absolute clause) சொல்லியமாம் (sentence).
கலைஞர் உரை:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தழுவிக்கொண்ட பின் பிணங்குவதெப்படி?) பிணங்க வேண்டுமென்ற உறுதியுடன்தான் நான் போனேன். ஆனால் கொழுப்பை நெருப்பில் போட்டதுபோல், காம வெப்பத்தால் உருகிக்கொண்டிருக்கிற மனமுடையவர்க்குத் தழுவிக்கொண்ட பின் பிணங்கி நிற்பதும் முடியுமா?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தீயிலிடப்பட்ட கொழுப்பானது எவ்வாறு உருகுமோ அதுபோன்ற நெஞ்சினையுடைய மகளிர்க்கு அவர் புணர, யாம் ஊடிப்பின்பு புணராது அந்நிலைமையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ?. உண்டாகாது.
தமிழ்க்குழவி உரை:
கொழுப்பினை தீயில் விட்டால் உருகுதல் போலத்தான் எம் நெஞ்சும் நெகிழ்வோடு இருக்க, ஊடல் கொள்வோம் என்று எண்ணுவது வீணானதே.
Translation
'We 'll stand aloof and then embrace': is this for them to say, Whose hearts are as the fat that in the blaze dissolves away?.
Explanation
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.
Transliteration
Ninandheeyil Ittanna Nenjinaarkku Unto Punarndhooti Nirpem Enal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1260