|
யான் காமத்தை என்னுள்ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காமத்தை யான் அடக்கக்கருதுவேன்: அவ்வாறு செய்யவும். அது தும்மல் தோன்றுமாறுபோல என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது. இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
[மகளிர் காமம் மறைக்கப்படுமென்ற தோழிக்குச் சொல்லியது.] யான் காமத்தை மறைப்பேன்- யான் இக்காமத்தை என்னுள்ளே அடக்கிவைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றிவிடும்- ஆனால், அது என் கருத்துவழி நிற்காமல் தும்மல் போலத் திடுமென்று வெளிப்பட்டு விடுகின்றது. தும்மல்போலக் காமமும் அடங்குகின்றதில்லை யென்பதாம் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் இரக்கக் குறிப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைத்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
நானோ என் காமத்தை அடக்கிதான் வைக்கிறேன். ஆனால் அது எச்சரிக்கையில்லாமல் திடீரென்று தும்மல் வருவது போல் அடக்கவே முடியாதபடி வந்துவிடுகிறதே! என்ன செய்வேன்?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இக்காமத்தை நான் என்னுள்ளே மறைக்கக் கருதுகின்றேன். ஆனால், இஃது என் கருத்திற்குள் அடங்காமல் தும்மல்போல் வெளிப்பட்டு விடுகின்றது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலை என்னுள் மறைக்கத் தான் முயல்கின்றேன் ஆனால் திடீர் திடீர் என்று தும்மல் போல் தோன்றி தன்னை வெளிப்படுத்தி விடுகிறது.
|
|
Translation
|
|
I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.
|
|
Explanation
|
|
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
|
|
Transliteration
|
|
Maraippenman Kaamaththai Yaano Kurippindrith
Thummalpol Thondri Vitum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|