|
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின் அவ்வடக்கம் நன்மை பயக்கும்.
அறியப்படுவன- சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்: அடக்கப் படுவன- மெய் வாய் கண் மூக்கு செவி.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - ஒருவன் அறியத் தக்க நூல்களை யறிந்து இல்லறத்தின்கண் அடங்கி யொழுகுவானாயின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த நன்மையை விளைவிக்கும்.
ஆற்றின் அடங்குதலாவது, பிறன் பொருளைக் கவராமையும் பிறன் மனைவியை விழையாமையும் பிறனைத் தனக்கு அடிப்படுத்தாமையுமாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன்
நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அடக்க முடைமை என்பது ஒன்றுமறியாதவனாக அடங்கி யிருப்பதன்று;) கற்க வேண்டியதைக் கற்று அறிய வேண்டியதை அறிந்து அக்கல்வியறிவின் நெறியில் அடக்க முள்ளவனாக இருந்தால், அந்த அடக்கம் எவ்வளவு மிகுந்திருக்கிறதோ அவ்வளவுக்குச் சிறப்புண்டாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அடங்குதல் தமக்கு அறிவான செயல் என்று அறிந்துகொண்டு நன்மையான வழியில் அடங்கி இருப்பானேயானால் அந்த அடக்கமானது நல்லோரால் அறிந்துணரப்பட்டு அவனுக்குப் பெருஞ் சிறப்பினைக் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழிகள் தேர்ந்து அடக்கமுடன் ஒருவர் வாழ்வாராயின் அச்சிறப்புகளால் மேன்மேலும் மேன்மை உண்டாகும்.
|
|
Translation
|
|
If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.
|
|
Explanation
|
|
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.
|
|
Transliteration
|
|
Serivarindhu Seermai Payakkum Arivarindhu
Aatrin Atangap Perin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|