Thirukural

நனவினால் நல்காரை நோவர் கனவினால்காதலர்க் காணா தவர்.

கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர். (இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
கனவினாற் காதலர்க் காணாதவர் - தமக்கொரு காதலரின்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - நனவின்கண் தாம் அறியவந்து கூடியின்பந்தராத நம் காதலரை அன்பிலரென்று பழித்து நொந்து கொள்வர். இயற்பழித்தது பொறாது புலக்கின்றா ளாதலின், தோழியை அயன்மை தோன்றக் கூறினாள். இங்கும் மூன்றாம் வேற்றுமை யுருபுகள் மேற்கூறியனவே.
கலைஞர் உரை:
கனவில் காதலரைக் காணாதவர்கள்தான் அவர் நேரில் வந்து காணவில்லையே என்று நொந்து கொள்வர்.
சாலமன் பாப்பையா உரை:
இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர், ஆதலால், அவர்கள் அறிய நேரில் வந்து என்னிடம் அன்பு காட்டாத என்னவரை அன்பற்றவர் என்று ஏசுகின்றனர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இருந்தாலும் கனவிலாவது அடிக்கடி அவர் வருவதற்கு அவரை வாழ்த்துகிறேன்.) கனவிற்கூடத் தம்முடைய காதலரைக் கண்டு மகிழாத பெண்கள்தாம் தம்முடைய காதலர் நனவில் வராததற்கு நொந்துகொள்ள வேண்டும். நான் ஏன் அவரை நோக வேண்டும்?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தமக்கு ஒரு காதலர் இல்லாமையால், அவரைக் கனவில் கண்டறியாத மகளிர், தாம் அறிய நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை அன்பிலர் என்று நொந்து கொள்ளுகின்றனர்.
தமிழ்க்குழவி உரை:
கனவில் தம் காதலரைக் கண்டு மகிழாத பெண்களே, நனவில் வந்து அவர் அன்பு செய்ய வில்லையே என்று கடிந்து கொள்வார்கள்.
Translation
In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieve.
Explanation
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours.
Transliteration
Nanavinaal Nalkaarai Novar Kanavinaal Kaadhalark Kaanaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1219