|
தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(தான் ஆற்றுதற்பொருட்டுத் தலைமகனை இயற்பழித்தாட்கு இயற்பட மொழிந்தது.) துஞ்சுங்கால் தோள் மேலராகி - என் நெஞ்சு விடாது உறைகின்ற காதலர் யான் துஞ்சும் பொழுது வந்து என் தோள் மேலராய்; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின் விழிக்கும் பொழுது விரைந்து பழைய நெஞ்சின் கண்ணராவர்.(கலவி விட்டு மறையும் கடுமைபற்றி 'விரைந்து' என்றாள். ஒருகாலும் என்னின் நீங்கி அறியாதாரை நீ நோவற்பாலை யல்லை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(தானாற்றுதற் பொருட்டுத் தலைமகனை யியற்பழித்த தோழிக்கு. இயற்படமொழிந்தது.) துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி - என் உள்ளத்தில் இடைவிடா துறைகின்ற காதலர், யான் தூங்கும் பொழுது என் தோள்மேலமர்ந்திருந்து ; விழிக்குங்கால் விரைந்து நெஞ்சத்தர் ஆவர் - பின்பு விழிக்கும்போது விரைந்து பழையபடி என் உள்ளத்திற் புகுவர். நாள்தோறும் கனவில் வந்து கூடுபவரை நீங்கினாரென்று பழித்தல் தகாது என்பதாம். 'தோன்மேலராகி' இடக்கரடக்கல் விழிப்பின் திடுமைபற்றி 'விரைந்து' என்றாள்.
|
|
கலைஞர் உரை:
|
|
தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(கனவில் வந்தாலும் என் துன்பத்தைத்தான் அதிகப் படுத்துகிறார்.) நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது வந்து என் தோள்களைத் தழுவுகிறார். (காதலர் வந்துவிட்டாரென்ற மகிழ்ச்சி யோடு) நான் விழித்தவுடனே என் மனத்துக்குள் ஓடி மறைந்து விடுகிறார்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எனது நெஞ்சில் விடாமல் இருக்கும் காதலர் யான் தூங்கும்போது வந்து என் தோள் மேலராய் இருக்கின்றார். பிறகு நான் விழித்துக் கொள்ளும்போது விரைந்து எனது பழைய நெஞ்சினிடத்துச் சென்று விடுகின்றார்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தூங்கும் போது கனவில் வந்து என் தோள்களைத் தழுவும் காதலர் விழித்துக் கொண்டதும், ஓடி என் நெஞ்சத்தில் அமர்ந்து கொள்கிறார்.
|
|
Translation
|
|
And when I sleep he holds my form embraced;
And when I wake to fill my heart makes haste!.
|
|
Explanation
|
|
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul.
|
|
Transliteration
|
|
Thunjungaal Tholmelar Aaki Vizhikkungaal
Nenjaththar Aavar Viraindhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|