Thirukural

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது.'('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)
மணக்குடவர் உரை:
எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலரை இவ்வூர் இயற்பழியாவாறு அவர் குற்றத்தை மறைக்க வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.) எம் போல் அறை பறை கண்ணார் அகத்து மறை பெறல்- எம்மைப் போலப் பறையறையும் கண்ணையுடையார் தம் நெஞ்சிலடக்கிய மறைபொருளை யறிதல் ; ஊரார்க்கு அரிது அன்று-இவ்வூர் வாழ்நர்க்கு எளிதாகும். யான் மறைக்கவும் என் கண்கள் வெளிப்படுத்தலின் மறைத்துப் பயனில்லை யென்பதாம். மறைக்கப்படும் பொருள் மறை ; ஆகு பெயர். பறையறைந் தறிவித்தாற் போலப் பலர்க்குந் தெரிவித்தலின் 'அறைபறை கண் என்றாள். "இங்ஙனஞ் செய்யுள் விகார மாக்காது, அறைபறை கண்ணாரென்று பாடமோது வாருமுளர்." என்றார் பரிமேலழகர். இனி, 'எம்போற் இன்னோசை குன்றாதும். மரபு திரியாதும் இலக்கணம் வழாதும் இருத்தல் காண்க. மோனை கெடுமேயெனின், அதனாலிழுக்கில்லையென்றும், மோனையில்லா ஈற்றடியே திருக்குறளிற் பெருவழக்கென்றும் , கூறிவிடுக்க 'ஆல்' அசைநிலை.
கலைஞர் உரை:
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.
சாலமன் பாப்பையா உரை:
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இப்படிப்பட்ட கண்களையுடைய நான் எப்படி என் காம நோயை மறைத்து வைக்க முடியும் ?) இப்படி எப்போதும் அழுது கொண்டு என் நிலைமையைப் பறை சாற்றுகின்ற கண்களையுடைய நான் என் மனத்திலுள்ள காம வேதனையை ஊராருக்கு எப்படி மறைக்க முடியும் ?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எம்மைப் போலும் அறைபறையாகிய கண்களையுடையார் தம் மனத்தில் மறைத்து வைத்துள்ளதை இவ்வூரில் உள்ளார் அறிந்து கொள்ளுதல் எளிதாகும்.
தமிழ்க்குழவி உரை:
பறையறிவித்தல் போல உள்ள உணர்வுகளைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடுவதால் யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்கு அரிதன்று.
Translation
It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
Explanation
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.
Transliteration
Maraiperal Ooraarkku Aridhandraal Empol Araiparai Kannaar Akaththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1180