|
அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது. ('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து. பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
[வரைவிடை வைத்துப் பிரிவின்க ணாற்றாளாகிய தலைமகள் அவன் வந்து சிறைப்புறத்தானாத லறிந்து, அலரஞ்சி யாற்றல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.] அஞ்சல் ஓம்பு என்றார் பலர் நாண நீத்தக்கடை-தலை நாளில் தம்மை எதிர்ப்பட்ட போதே, நான் உன்னை விட்டு ஒருபோதும் பிரியேன்; ஆதலால் நீ அஞ்சுதலை விட்டுவிடு என்று தேற்றியவர் தாமே, இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின்; அலர்நாண ஒல்வதோ - அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக் கூடுமோ? கூடாதே!. கண்டார் நாணும் நிலைமையிலுள்ள நாம் நாணுதற்கு வழியேது என்பதாம்.
|
|
கலைஞர் உரை:
|
|
உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர் பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போது நான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
‘யார் என்ன சொன்னாலும் நான் இருக்கிறேன்; நீ பயத்தை விடு' என்று சொன்ன என் காதலர் இப்போது என்னைப் பிரிந்திருக்கிறார் என்பதால் பலபேர் பரிகாசம் பண்ணுவதற்காக நான் பயந்துவிடலாமா?
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எம்மைக் கண்டபோது 'உம்மைப் பிரியேன் அஞ்சாதே' என்று கூறியவர், தானே இன்று கண்டார் பலரும் நாணும் வகையில் பிரிந்திருப்பாராயின், நாம் அயலார் கூறும் அலருக்கு நாணுதல் கூடுமோ?.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அஞ்சற்க, உன்னைப் பிரியேன் என்றவர் பிரிந்தெங்கோ சென்றுவிட்டார். ஊரார் பழிச்சொல்லுக்கு நான் மட்டும் நாணித் தலைகுனிவதா?
|
|
Translation
|
|
When he who said 'Fear not!' hath left me blamed,
While many shrink, can I from rumour hide ashamed?.
|
|
Explanation
|
|
When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal.
|
|
Transliteration
|
|
Alarnaana Olvadho Anjalompu Endraar
Palarnaana Neeththak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|