Thirukural

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.)
மணக்குடவர் உரை:
யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
[அல்ல குறியாலும் இடை யீடுகளாலும் தலைமகனைத் தலைக்கூடப் பெறாத தலைமகள் , அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறுத்தி வரைவு கடாயது.] கண்டது ஒரு நாள் - யான் என் காதலரைக் கண்ணுறப் பெற்றது ஒரு வேளையே; அலர் திங்களைப் பாம்பு கொண்ட அற்று - ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைக் கரும் பாம்பு கௌவின செய்திபோல , உலக மெங்கும் பரவியுள்ளது. காட்சிக்கும் இடமில்லாதபோது இங்ஙனம் வீணாக அலர் பரவும் இக்களவொழுக்கத்தை உடனே விட்டுவிட்டு, வரைந்து கொள்ளுதல் வேண்டுமென்பதாம். 'பாம்பு கொண்டற்று' எனக் கருமியத்தைக் கரணியமாகச் சார்த்திக் கூறினாள். கதிரவன் மறைவைக் கேது என்னும் செம்பாம்பு கௌவலாகவும், திங்கள் மறைவை இராகு என்னும் கரும்புபாம்பு கௌவலாகவும், கருதியது பண்டைக் குருட்டு நம்பிக்கை. சே -சேது-கேது. இர்-இரா-இராவு-இராகு. மன்னும் உம்மும் ஈரிடத்தும் அசை நிலை யென்பர். இடையீடுகள் நிலா வெளிப்படுதலும் நாய் குரைத்தலும் ஊரார் விழாக் கொண்டாடுதலும் போல்வனவற்றால் நிகழ்வன. சிறைப்புறம் வேலிக்கு வெளிப்பக்கம்.
கலைஞர் உரை:
காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.
சாலமன் பாப்பையா உரை:
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இனி, காதலி சொல்லுவது:) என் காதலரோடு கலந்து நான் இன்பங் கண்டது என்னவோ ஒரே ஒரு நாள் தான். ஆனால் அதைப்பற்றிய பரிகாசப் பேச்சு என்னவோ சந்திரனைப் பாம்பு பிடித்துக் கிரகணம் உண்டானதைப்போல் எல்லாருக்கும் தெரிவதாகிவிட்டது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
யாம் காதலரைக் கண்டது ஒரு நாளேயாகும். அதனால் உண்டாகிவிட்ட அலர் அந்த அளவின்றிக் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று எங்கும் பரவிவிட்டது.
தமிழ்க்குழவி உரை:
நான் என் காதலரைக் கண்டது ஒரே ஒரு நாள் தான். அதற்குள் நிலவைப் பாம்பு விழுங்கிய கதையைப்போல் அது எங்கும் பரவி விட்டது.
Translation
I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moon.
Explanation
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.
Transliteration
Kantadhu Mannum Orunaal Alarmannum Thingalaip Paampukon Tatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1146