Thirukural

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான். (பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும். இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஊர் அறிந்த கௌவை உறாதோ-யானும் என் காதலியுமாகிய எங்கட்குக் கூட்டமுண்மை இவ்வூரார் அறிதலால் விளைந்த அலர் எனக்கு ஏற்ற தொன்றன்றே !; அதனைப் பெறாது பெற்ற அன்ன நீர்த்து-அதைக் கேட்ட நான், அக் கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற்போல இன்புறுதற் கேதுவான தன்மையை அவ்வலர் உடைத்தாகலான். கௌவை நீர்த்து என இசையும். பரிமேலழகர் போல் மனமென்னும் வினைமுதலை வருவிக்கத் தேவையில்லை. 'உறா அதோ' 'பெறா அது' இசைநிறையளபெடைகள்.
கலைஞர் உரை:
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!.
சாலமன் பாப்பையா உரை:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (திருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் உள்ள தொடர்பை ஊரிலுள்ள எல்லாரும் அறியும்படி செய்துவிட்ட இந்த ஏளனப் பேச்சு நல்லதுதான். ஏனென்றால், எனக்குக் கிடைக்குமோ என்று நான் ஏங்கியிருந்த அவளுடைய இன்பம் கிடைக்கும் என்பது இதனால் நிச்சயமாகிறது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
எங்கள் காதல் உண்மையினை இவ்வூர் அறிதலால் உண்டான அலர் எனக்குத் தேவைப்பட்டதேயாகும். அதுகேட்ட என் மனம் அவளுடன் கூடுவதைப் பெறாதிருந்தும் பெற்றது போன்ற தன்மையை அடைகின்றது.
தமிழ்க்குழவி உரை:
ஊரார்கூடி எம் காதலைப் பேசப்பேச, பெறாத அவளை நானும் பெற்று விட்டதாகவே மனம் மகிழ்கிறேன்.
Translation
The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not be.
Explanation
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).
Transliteration
Uraaadho Oorarindha Kelavai Adhanaip Peraaadhu Petranna Neerththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1143