|
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.) காமம் உழந்து வருந்தினார்க்கு - அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு; ஏமம் மடல் அல்லது வலி இல்லை - பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது, இனி எனக்கு வலியாவதில்லை. (ஏமமாதல்: அத்துன்பம் நீங்கும் வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். வலி: ஆகுபெயர். 'பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்திவருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணை என்று கருதிக் கொன்னே முயன்ற யான், இது பொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான், இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல்', என்பது கருத்து.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமாவது மடல் ஏறுவதல்லது மற்றும் வலி யில்லை. இது தலைமகனை தோழி சேட்படுத்தியவிடத்து மடலேறுவேனென்று தலைமகன் கூறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது . ) காமம் உழந்து வருந்தினார்க்கு - பெறற்கரிய மகளிரொடு காமவின்பம் நுகர்ந்து பின்பு அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு ; ஏம மடல் அல்லது வலி இல்லை - தொன்று தொட்டுக் காப்பாக இருந்துவருகின்ற மடலேற்றமன்றி வேறொரு வலிமையு மில்லை . ஏமமாதல் அத்துன்பம் நீங்குமாறு அந்நுகர்ச்சியை மீளத்தருதல் , பண்டைநாளிலும் என்போன்ற ஆடவர் இம்முறையே கையாண்டு வந்திருக்கவும் , நான் உன்னை நம்பி அதைப் புறக்கணித்தேன் . இன்று நீ எனக்குத் துணையல்லாமையை அறிந்தேனாதலின் , அவ்வழியையே கடைப்பிடித்து இன்பம் நுகரக் கருதுகின்றேன் என்றாவாறு .வலி, ஆகு பொருளது . மடலேறும் வகை வருமாறு :- தன் காதலியைப் பெறாத காதலன் ஆடைகளைந்து நீர்ச்சீலையணிந்து , உடம்பெல்லாம் சாம்பரைப் பூசி , எருக்கமாலை யணிந்து , தன் காதலியின் உருவம் எழுதிய படத்தைக் கையிலேந்திக் கொண்டு , அதையே நோக்கி , அவளிருக்கும் ஊர் நடுவே எல்லாருங் காணத் தவநிலையிலிருப்பன் . அவ்வூர்த்தலைவர் அவனைக் கண்டு காதலாய்விற்கு அவன் உடம்பட்டபின் , அவனைப் பனங்கருக்கு மட்டையாற் செய்த குதிலைமேலேற்றிப் பெருந் தெருவூடிழுத்துச் செல்வர் . கருக்குப் பட்ட விட மெல்லாம் அரத்தந் தோன்றாது விந்து நீர் தோன்றின் , அவன் காதலியை அவனொடு கூட்டிவைப்பர் ; இன்றேல் வையார் . இது அநாகரிகமும் பேதைமையும் மிக்க முந்து கால வழக்காதலின் , தமிழிலக்கியத்திற் குறித்திருப்பதெல்லாம் அதை நினைவுறுத்தலேயன்றி வேறன்றென்க .
|
|
கலைஞர் உரை:
|
|
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(களவாகப் புணர்ந்து பிரிந்து காதலர்கள் பகிரங்கமாக மணந்துகொள்ள விரும்பித் தம்முடைய காதலை வெளிப்படுத்தும்படி நடந்துகொள்வது. காதலன் சொல்லுகிறான்:) ஒரு பெண்ணைப் புணர்ந்து காம இன்பத்தை அனுபவித்துப் பின் அவளைப் பிரிந்து வருந்துகின்ற ஒருவனுக்கு மடல்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைமீது சவாரி செய்து காதலை விளம்பரப்படுத்துவதை விட வேறு வழியில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தம் காதலியோடு காமத்தினை அனுபவித்துப் பின்பு அது பெறாமல் இருக்கும் ஆடவர்க்கு பழங்காலந்தொட்டு வருகின்ற பாதுகாப்புமுடன் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
காதலால் துன்புற்று வருந்து வோர்க்கு வெட்கத்தை விட்டுத் தன் காதலை வெளிப்படுத்துவதற்கு பாதுகாப்பான வழி மடல் ஏறுதலே.
|
|
Translation
|
|
To those who 've proved love's joy, and now afflicted mourn,
Except the helpful 'horse of palm', no other strength remains.
|
|
Explanation
|
|
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.
|
|
Transliteration
|
|
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|