Thirukural

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)
மணக்குடவர் உரை:
மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை. தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
( ஒருவழிந் தணந்துவந்த தலைமகன் , நீயிர் தணந்த ஞான்று எம்மை நினைத்தீரோ என்ற தோழிக்குச் சொல்லியது .) ஒள் அமர்க் கண்ணாள் குணம் யான் மறப்பின் உள்ளுவன் - ஒளிபொருந்தியவாய் செய்யுங் கண்ணையுடையாளின் குணங்களை யான் என்றேனும் மறந்தேனாயின்நினைத்திருப்பேன் ; மறப்பு அறியேன் - ஆயின் , யான் ஒருபோதும் மறந்ததில்லை ஆதலால் நினைத்ததுமில்லை . குணங்கள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு , அன்பு , கற்பு என்பன . ' மன் ' ஒழியிசைக்கண் வந்தது . இதுவரையுந் தலைமகன் கூற்று ; இனிவருவன தலைமகள் கூற்று . ஒருவழித் தணத்தலாவது , இரவுக்குறிக் காலத்திறுதியில் அலரெழுந்தபின் அது அடங்கும்வரை தலைமகன் சிலநாள் தன் ஊரின்கண் தங்கியிருத்தல் .
கலைஞர் உரை:
ஒளி கொண்டிருக்கும் விழிகளையுடைய காதலியின் பண்புகளை நினைப்பதேயில்லை; காரணம் அவற்றை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு.
சாலமன் பாப்பையா உரை:
ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஆசை மூட்டுகின்ற ஒளியோடு கூடிய கண்களையுடைய என் காதலியின் குணச் சிறப்பை மறந்தாற்போல் கூட மறக்க முடியவில்லை. எப்போதும் அதை எண்ணிக்கொண்டேயிருப்பேன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒளிபொருந்தியதாய்ப் போர் செய்யும் கண்ணிணையுடையாள் குணங்களை யான் மறப்பேனானால் நினைப்பேன். (ஆனால் நான்) ஒருபோதும் மறந்தலையறியேன். ஆதலால், நினைத்தலையும் அறியேன்.
தமிழ்க்குழவி உரை:
ஒளிமிகுக் கண்களை உடைய அவளை, நான் நினைத்தும் பார்க்க வேண்டுமா? மறந்தால் தானே நினைப்பதற்கு
Translation
I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.
Explanation
If I had forgotten her who has bright battling eyes, I would have remembered (thee); but I never forget her. (Thus says he to her maid).
Transliteration
Ulluvan Manyaan Marappin Marappariyen Ollamark Kannaal Kunam

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1125