|
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(பாங்கற்கூட்டத்துச் சென்று சார்தலுறுவான் சொல்லியது.) குவளை - குவளைப் பூக்கள் தாமும்; காணின் - காண்டல் தொழிலையுடையவாயின்; மாண் இழை கண் ஒவ்வேம் என்று கவிழ்ந்து நிலன் நோக்கும் - மாண்ட இழையினை உடையாள் கண்களை யாம் ஒவ்வேம் என்று கருதி அந்நாணினால் இறைஞ்சி நிலத்தினை நோக்கும்.(பண்பானேயன்றித் தொழிலானும் ஒவ்வாது என்பான், 'காணின்'என்றும், கண்டால் அவ்வொவ்வாமையால் நாணுடைத்தாம் என்பது தோன்றக் 'கவிழ்ந்து' என்றும் கூறினான். காட்சியும் நாணும் இன்மையின் செம்மாந்து வானை நோக்கின என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
குவளைமலர் காணவற்றாயின் மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாளது கண்ணை ஒவ்வோமென்று நாணி, கவிழ்ந்து நிலத்தை நோக்கும். இது காணுந்தோறும் ஒவ்வாதென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
(பாங்கற் கூட்டத்துச் சென்று சார்வான் கூறியது .) குவளை - குவளைப் பூக்கள் தாம் ; காணின் - காணுந் தொழிலையுடையனவாயின் ; மாண் இழை கண் ஒவ்வேம் என்று - வினைத்திறத்தால் மாட்சிமைப்பட்ட அணிகலன் களையுடைய இவள் கண்களை யாம் ஒவ்வேமென்று கருதி ; கவிழ்ந்து நிலன் நோக்கும் - அந்நாணத்தினாற் குனிந்து நிலத்தை நோக்கும் . பண்பாலன்றித் தொழிலாலும் ஒவ்வாமையாற் ' காணின் ' என்றும் . கண்டால் நாணும் என்பது தோன்றக் ' கவிழ்ந்து ' என்றும் , கூறினான் . காட்சியும் நாணமுமின்மையாற் செம்மாந்து மேல் நோக்கின என்பது தற்குறிப்பேற்றம் . ' மாணிழை ' அன்மொழித் தொகை .
|
|
கலைஞர் உரை:
|
|
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே! எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குவளைப் பூக்களால் காண முடியுமானால், சிறந்த அணிகளைப் பூண்டிருக்கும் என் மனைவியின் கண்ணைப் போல தாம் இருக்கமாட்டோம் என்று எண்ணி நாணத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
குவளைமலர் என் காதலியைப் பார்த்தால் சிறந்த ஆபரணங்களை அணிந்துள்ள அவளுடைய கண்களுக்குத் தாம் ணையாக, இல்லாமைக்கு வெட்கப்பட்டுத் தலையைக் குனிந்து கொண்டு நிலத்தைப் பார்க்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குவளை மலர்களுக்குக் காணுகின்ற தன்மை இருக்குமானால் சிறந்த இழையினையுடைய இப்பெண்ணின் கண்களுக்கு ஒப்ப மாட்டோம் என்று எண்ணிக் கவிழ்ந்து நிலத்தினைப் பார்க்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவளின் கண்களைக் கண்டால், இவள் கண்களுக்கு நிகராக மாட்டோம் என்று வருந்தியே குவளை மலர்கள் நிலன் நோக்கிக் கவிழ்கின்றன.
|
|
Translation
|
|
The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie'.
|
|
Explanation
|
|
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".
|
|
Transliteration
|
|
Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|