|
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இதுவுமது செறாச் சிறுசொல்லும் - உண்மையாக வெறுப்புக் கொள்ளாத போலிக்கடுஞ்சொல்லும் ; செற்றார்போல் நோக்கும் - அகத்திற் பகையாதிருந்தே புறத்திற் பகைத்தார் போற் பார்க்குஞ் சினப்பார்வையும்; உறார்போன்று உற்றார் குறிப்பு- அயலார்போல் நடித்து அன்பராயிருப்பவரிடம் ஒரு கருத்துப்பற்றி நிகழ்வனவாம். இவை இயல்பல்லாது உள்ளத்துட் குறித்த ஒரு பயன்நோக்கிச் செய்கின்றன வாதலின், இவற்றாற் கலங்கவேண்டிய தின்று என்பதாம். 'குறிப்பு' ஆகுபெயர். 'செறா அர்', 'உறா அர்' இசை நிறையளபெடைகள்.
|
|
கலைஞர் உரை:
|
|
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால் இவள் இசைவாள் என்று அறிந்து கலவிக்கு அழைத்தேன். அப்போது இவளுடைய) கோபமில்லாத மறுப்புச் சொற்களும், கோபித்தது போன்ற பார்வையும் காம ஆசை வராதவர்கள் போல் காட்டிக்கொள்ளுகிற காம ஆசை வந்துவிட்ட பெண்களின் அடையாளம் (என்பதைக் காட்டின.)
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பின்னர் இனிதாகவும் முன்னர் இனிமை இல்லாததுமான சொல்லும், மனத்தில் கோபியாதிருந்து புறத்தே கோபித்தார் போன்ற வெகுளி நோக்கும் அயலார் போன்றிருந்து நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவனவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பகைமையில்லாத கடுஞ்சொற்களும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் அயலார்போல் பழகும் பாங்கும் காதலை வெளிப் படுத்துவனவாகும்.
|
|
Translation
|
|
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.
|
|
Explanation
|
|
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
|
|
Transliteration
|
|
Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|